காயல்பட்டினத்தில் குறைந்தபட்சம் 27 லட்சம் ரூபாய் அளவிலேனம் நலத்திட்டப் பணிகளைச் செய்திட, நாடாளுமன்ற ராஜ்ய சபா (மாநிலங்களவை) உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கோரிக்கைகளை முன்வைக்க “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
MPLADS என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் - பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருக்கும், ஆண்டொன்றுக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, வரைமுறைக்குட்பட்டு, அவ்வுறுப்பினர்கள் - பணிகளை பரிந்துரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி - பொது மக்கள் வாக்களித்து, ஒரு தொகுதியின் பிரதிநிதியாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர், அந்த நிதியை அவரின் தொகுதியில் முழுவதும் செலவிடலாம். தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் (லோக் சபா) உள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்வாகும் ராஜ்ய சபா செல்லும் உறுப்பினர்கள் தமிழகத்தில் 18 பேர் உள்ளார்கள். அவர்களுக்கும் - மத்திய அரசு, ஆண்டொன்றுக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அவர்களின் பதவி காலம் - ஆறு ஆண்டுகள் என்பதால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் மொத்த தொகை, 30 கோடி ரூபாய் ஆகும். ராஜ்ய சபா உறுப்பினர்கள் - அவர்களை தேர்வு செய்யும் மாநிலத்தின் எந்த பகுதியிலும், திட்டங்களை பரிந்துரை செய்யலாம்.
அந்த அடிப்படையில் - காயல்பட்டினம் நகருக்கு, ராஜ்ய சபாவின் 18 உறுப்பினர்கள் மூலம் திட்டங்களை கொண்டு வர, அவ்வுறுப்பினர்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை வைக்க, நடப்பது என்ன? குழுமம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் மொத்த வாக்காளர்களில், காயல்பட்டினம் வாக்காளர்கள் - 0.05 சதவீதம் என்ற அடிப்படையில், ஆறு ஆண்டுகளில் - அனைத்து ராஜ்ய சபா உறுப்பினர்களும் சேர்ந்து, நகரில் குறைந்தது - 27 லட்சம் ரூபாய் வரையில் பணிகளை மேற்கொள்ள, நடப்பது என்ன? குழுமம் - வேண்டுகோள் வைக்கவுள்ளது. அதாவது - ஒவ்வொரு உறுப்பினரும், குறைந்தது - 1.5 லட்சம் ரூபாய் ஆவது, காயல்பட்டினத்திற்கு ஒதுக்க - நடப்பது என்ன? குழுமம், கோரிக்கை வைக்கவுள்ளது.
உறுப்பினர்களை தனியாக சந்தித்து கோரிக்கை வைப்பதுடன், அவர்கள் சார்ந்த கட்சி தலைமையிடமும், இது சம்பந்தமான கோரிக்கையை நடப்பது என்ன? குழுமம் - இறைவன் நாடினால் - வைக்க உள்ளது.
தற்போது - ராஜ்ய சபாவில், 12 அ.தி.மு.க. உறுப்பினர்களும், 4 தி.மு.க. உறுப்பினர்களும், 1 சி.பி.ஐ. உறுப்பினரும், 1 சி.பி.எம். உறுப்பினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயசிங் நட்டர்ஜியிடம், கடந்த வெள்ளியன்று, காயல்பட்டினத்தில் குறைந்தது 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 26, 2017; 6:30 pm]
[#NEPR/2017112602]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|