தம் கோரிக்கையை ஏற்று, காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையில் உள்ள பழுதுகளைச் சரி செய்து புனரமைத்தமைக்காக, தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலருக்கு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நன்றி தெரிவித்துள்ளதுடன், நிலுவையிலுள்ள வேகத்தடை அமைக்கும் பணியையும் விரைந்து செய்திட வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (#176), பல்வேறு இடங்களில் பழுதடைந்துள்ளது குறித்து செப்டம்பர் 4 அன்று - மாவட்ட ஆட்சியரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - மனு வழங்கப்பட்டது.
அம்மனுவிற்கு பதில் வழங்கிய நெடுஞ்சாலைத்துறையின் தூத்துக்குடி கோட்டப்பொறியாளர், அக்டோபர் 30 தேதிக்குள் - சாலை, புனரமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அக்டோபர் 30 க்கு பிறகும் இச்சாலை புனரமைக்கப்படாதது குறித்து சென்னையில் உள்ள தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலரும், நெடுஞ்சாலைத்துறையின் அரசு முதன்மை செயலருமான திரு ராஜீவ் ரஞ்சன் IAS இடம் - நவம்பர் 14 அன்று மனு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து - 21-11-2017 அன்று சாலைகள் புனரமைக்கும் பணிகளை - நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுள்ளது. அஜ்ஹர் சந்திப்பு பணிகள் - மழைநீர் தேக்கம் காரணமாக, ஓரிரு தினங்களில் நடைபெறும் என தெரிகிறது.
இருப்பினும் - நடப்பது என்ன? குழுமத்தின் மற்றொரு கோரிக்கையான - தாயிம்பள்ளி சந்திப்பில் கூடுதல் வேகத்தடை, சேக் ஹுசைன் பள்ளி அருகில் வேகத்தடை அமைப்பதற்கான கோரிக்கை - கடந்த எட்டு மாதங்களாக நிலுவையில் உள்ளது.
சாலைப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டமைக்கு அரசு செயலருக்கு, 22.11.2017. அன்று “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக - நன்றி கடிதம் கொடுக்கப்பட்டது; மேலும் - நிலுவையில் உள்ள வேகத்தடை பணிகளை விரைவாக செய்திட உத்தரவிடும் படியும், வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 22, 2017; 8:30 pm]
[#NEPR/2017112202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|