செளதி அரேபியா – ஜித்தா, கடந்த 10.11.2017 வெள்ளிக்கிழமை யான்பு நகரில் வைத்து ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 107-ஆவது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
செளதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக யான்பு வாழ் காயல் சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக சென்ற 09.11.2017 வியாழக்கிழமை மாலை 07:00 மணியளவில் ஜித்தாவிலிருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யான்பு நகருக்கு மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், ஜித்தா ஷரபியாவில் உள்ள ஆரியாஸ் உணவகம் முன்பு ஒன்று கூடி, ஆறு வாகனங்களில் பயணமாயினர். வழியில் ரத்வா கம்பெனி பள்ளிவாசல் அருகில் இரவு சிற்றுண்டிக்காக ஒதுங்கி, சகோ. குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் ஏற்பாட்டில் கொண்டு வந்திருந்த தேநீர் மற்றும் வடைகள் பரிமாறப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.30 மணியளவில் யான்பு கலவா சகோதரர்கள் வீடு வந்தடைந்தோம்.
எங்களை அன்போடு வரவேற்று பின் அங்கிருந்து இஸ்திராஹா என்னும் ஓய்வு இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு இரவு உணவு பரிமாறி உபசரித்த பிறகு, ஜித்தா, மக்கா மற்றும் யான்பு காயலர்கள் சங்கமமாகி, காயல்பதிலே இருப்பது போன்று மிகுந்த உற்சாகத்துடன், சகோ.ஆதம் சுல்தான், சகோ. குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன், சகோ.கவிஞர் ஜாகிர் ஹுசைன், சகோ.அபுல்ஹசன் மற்றும் சகோ. வி.எஸ்.ஹெச். செய்து முஹம்மது அலி, இவர்கள் தன்னுடைய அழகிய குரலிலே பாடல்கள் பாடி மகிழ்விக்க சகோ. ஏ.எம். செய்யிது அஹ்மது சிந்தனைக்கு விருந்தாக கணக்கு ஒன்றைத் தந்து விடையை எதிர்பார்க்க பலர் பலவித பதில்களை தந்து, அன்றைய இரவு கழிந்து மன மகிழ்வோடு மலர்ந்தது காலை பொழுது.
காலையில் அதே உற்சாகத்துடன் துள்ளி குதித்து எழும்பிய காயல் காளையர்கள் நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடினர். சிலர் குழுவாக உரையாடி கொண்டிருக்க, சகோ.கலவா எம்.ஏ. முஹம்மது இப்ராஹிம் தன் குழுவினருடன் தேனீர், காலை சிற்றுண்டி, மற்றும் மதிய உணவு என தயாரித்து காயல் கண்மணிகளை உபசரிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார்.
காலை பசியாறு உண்டபின் ஜும்மா வேளை வந்ததால் யாவரும் தன்னை தயார் படுத்திக்கொண்டு அருகில் உள்ள ஜும்மா பள்ளிக்கு வாகனத்தில் சென்று, தொழுகை முடிந்து வந்த பிறகு நமது ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 107 – வது செயற்குழு யான்பு நகர் வாழ் காயல் மன்ற உறுப்பினர்களுடன் வெகு சிறப்பாக ஆரம்பமானது.
கூட்டம் ஆரம்பிப்பதற்க்கு முன் சகோ. கவிஞர் ஜாஹிர் ஹூசைன் கலவா சகோதரர்கள் எம்.ஏ.அபூபக்கர் மற்றும் எம்.ஏ.முஹம்மது இப்ராஹீம் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். அதன் பின் தன் அழகிய குரலோசையால் வெற்றி என்ற தலைப்பில் நல்ல அர்த்தம் பொதிந்த கவிதை ஒன்றை படித்து காட்டிய பிறகு வாழ்த்துப்பா பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
இனிய இந்நிகழ்விற்கு சகோ.முஹம்மது ஆதம் சுல்தான் தலைமை தாங்கினார். பொறியாளர் அல்ஹாஃபிழ் எம்.பி.யு. நூஹு இறைமறை ஓத, சகோ.கலவா எம்.ஏ. முஹம்மது இப்ராஹிம் வந்திருந்த அனைவரையும் அகமகிழ வரவேற்றார்.
தலைமையுரை:
சென்ற செயற்குழு புனித மக்காவில் நடந்த போது அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அல்லாஹ் எனக்கு தந்தான். அப்போது அடுத்த செயற்குழு கூட்டம் எங்கள் யான்புவில் நடத்தவேண்டும் என தம்பி கலவா இபுராஹிம் சொன்ன விருப்பத்தை நான் தெரிவித்தேன், உடனே அன்று பூத்த ரோஜா மலர்போல் உங்கள் முகமெல்லாம் மகிழ்ச்சியில் மலர்ந்ததை காண முடிந்தது. இன்று வெகு தொலைவிலிருந்து யான்பு வந்து நம் காயல் சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடுவது மிகுந்த சந்தோசமளிக்கிறது, என்று கூறி வந்த உறுப்பினர்கள் அனைவர்களையும் வருக வருக என்று அகமகிழ வரவேற்று, இங்கு நாம் சந்தோசமாக கூடி மகிழ்ந்து கலைந்து செல்வதற்காக வரவில்லை, நம்மூர் ஏழை எளிய மாணவர்களுக்கு, மற்றும் நோயுற்றவர்களுக்கு நம்மால் ஏன்ற உதவியை செய்யவேண்டும். என்ற நல்ல நோக்கத்துடன் நாம் இங்கு கூடி இருக்கிறோம். நம் புண்ணிய நோக்கம் நிறைவேற நாம் இம்மன்றதுடன் ஒன்றிணைந்து பணிகளாற்ற வேண்டுமென்றும், நாம் என்ன செய்தோம், என்ன செய்வோம் என ஆழ சிந்தித்து நம் பணிகளை முன்னெடுக்கவேண்டுமென்றும், மன்றத்தின் பணிகளுக்கு யான்பு காயலர்கள் என்றும் துணை நிற்பார்கள், நாம் நற்பணிகளை தொடர்ந்து செய்து அல்லாஹ்வின் அருளை பெறுவோம், அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன் என்று தனது தலைமை உரையை நிறைவு செய்து அமர்ந்தார் சகோ.முஹம்மது ஆதம் சுல்தான்.
அடுத்து பேசிய மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் மன்றத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள், கல்வி மற்றும் மருத்துவதிற்கு செய்யும் உதவிகள் குறித்த குறிப்பை நினைவூட்டிய அவர், நம் மன்றத்தின் வாயிலாக சமீபத்தில் நடந்து முடிந்த கல்வி வழிகாட்டி முகாம் மூலம் மாணவர்கள் பெற்ற பயன்களையும், சில மாணவிகள் தந்த கருத்துக்களையும் வாசித்துக் காட்டி இந்த முகாம் நடத்த உறுதுணை புரிந்த அனைவருக்கும் இம்மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்து, இதுபோன்று ஒன்றுபட்டு செயல்பட்டால் மேலும் பல நல்ல பணிகளை நமதூருக்கு வழங்கலாமென்றும கூறி தனதுரையை சுருக்கமாக நிறைவு செய்தார்.
மன்ற செயல்பாடுகள்:
மருத்துவம் மற்றும் உயர் கல்விக்கான உதவிகள் வழங்கி வருவதோடு, நகரின் அவசியம் அறிந்து உதவி செய்வதும், கடந்த அக்டோபர் மாதம் புனித மக்காவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகள், மன்ற செயல்பாடுகள், தீர்மானங்கள் அதன் நிமித்தம் நடேந்தேறிய பணிகள் மற்றும் இதர தகவல்களை விபரமாக எடுத்துரைத்து, இம்மன்றம் தோய்வின்றி தொடர்ந்து நல்ல பல பணிகளை செய்திட தங்களின் நன்கொடைகளையும் சந்தாவையும் முறையாக செலுத்தி, நம் ஊர் ஏழை மக்களுக்கு உதவி செய்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளை பெறுவோமாக என்று எடுத்துரைத்து அமர்ந்தார் மன்றச்செயலாளர் சகோ சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
நிதி நிலை அறிக்கை:
உறுப்பினர்களால் பெறப்பட்ட சந்தா, நன்கொடைகள், வழங்கப்பட்ட உதவி தொகைகள், கல்விக்கென வழங்கிய தொகை, தற்போதைய இருப்பு போன்ற முழு விபரங்களையும் நிதிநிலை அறிக்கையாக சமர்ப்பித்து, இக்ரா கல்விச் சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினராக இதுவரை இம்மன்ற உறுப்பினர்கள் 18 பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். மேலும் பதிவு செய்யாதவர்கள் இக்ரா சகோ.தர்வேஷ் அவர்களை தொடர்பு கொண்டு தாங்கள் உறுப்பினராக இணையும் படி வேண்டிக்கொண்டார் மன்றப்பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம்.
கருத்துரைகள்:
கல்வி மற்றும் மருத்துவ தேவைகளின் அவசியத்தை வலியுறுத்தியும், மன்றம் செய்து வரும் சீரிய சேவைகளை நினைவூட்டியும், இங்கு வந்து இந்த யான்பு காயலர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. ரெம்ப அருமையா இருந்தது உங்க உபசரிப்பு என்ற கொஞ்சும் தமிழில் பேசி தனதுரையை முடித்துக்கொண்டார் மன்றத் துணைத்தலைவர் சகோ மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது.
ரியாத்தில் இருந்து வந்து கலந்து கொண்ட சகோ. எம்.பி. தாவூது இம்மன்றம் ஆற்றிவரும் நல்ல பணிகளை நானும் அவதானித்து வருகிறேன். தொடர்ந்து நம் மக்களுக்காக நாம் சோர்வின்றி பணிகள் செய்திட நான் பிராத்திகின்றேன், என்று கூறினார்.
நாங்கள் சந்தா தருகிறோம் ஆனா நீங்கள் உங்க வேலை பளுவிற்கு மத்தியில், சேவை மனப்பான்மையுடன் நம் மக்களுக்காக நல்ல பல சேவைகள் ஆற்றி வருவதை பார்க்கும் போது மனசு ரெம்ப சந்தோசமா இருக்கு அல்லாஹ் உங்களுக்கு சிறப்பான வாழ்வை தருவான் என்று துஆ செய்தார்கள் சகோ.கலவா எம்.ஏ. அபூபக்கர் அவர்கள். சகோ.பாளையம் நஜ்ஜார் தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு இம்மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் வருவதற்கு, தான் மிக சிரமப்பட்டு அனுமதி வாங்கிய கதையை அழகுற எடுத்துரைத்து அனைவரையும் குதூகலப்படுத்தி நம் மன்ற சேவைதனை வெகுவாக பாராட்டி துஆ செய்தார்.
மருத்துவ நிதி உதவி:
தன் மருத்துவ தேவை கோரி வந்த வறியவரின் மனுக்கள் நேரம்மிமை காரணத்தால், அவர்களின் கோரிக்கை எவ்வளவு, நோய் தன்மை, மற்றும் தெரு இவைகளை மன்றத்தலைவர் குளம் அகமது முஹியத்தீன் கோடிட்டு காட்டி, மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது மனுவினை சரிபார்த்து, மன்றத்தின் சார்பாக உறுப்பினர்களின் அனுமதி பெற்று தொகை அறிவிப்பு செய்தார். அதில் கர்ப்பப்பை அறுவைச் சிகிச்சை மூவர், கால் எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை இருவர், இதயம் திறந்து அறுவைச் சிகிச்சை, மற்றும் தொடர் மருத்துவம் என இருவர், ஆக எட்டு பயனாளிக்கு அன்றைய தினம் வழங்க முடிவு செய்யப்பட்டு அவர்களின் பூரண உடல் நலத்திற்கு பிராத்திக்கப்பட்டது.
கல்வி உதவி:
அத்துடன் வந்த கல்வி மனுக்கள் B.E. இருவர், B. Pharm, ஒருவர் என மூவருக்கும் கல்வித் தொகை வழங்கப்பட்டது.
தீர்மானங்கள்:
1 - ஜித்தா காயல் நற்பணி மன்றம், இக்ரா கல்விச் சங்கம் ஏற்பாட்டில் நடத்திய இலக்கை நோக்கி – Goal Setting வழிகாட்டி நிகழ்ச்சி சென்ற மாதம் 11 தேதி மற்றும் 12 தேதிகளில் மாணவ மாணவியர்களின் பங்கேற்பு நிகழ்ச்சியாக நடைபெற்றது. அந்த நிகழ்வை திறம்பட நடாத்தி தந்த Access India குழுவினர்க்கும், சிறப்புற நடத்திட உறுதுணை புரிந்த பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும், மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், குறிப்பாக இக்ரா கல்விச் சங்க நிர்வாகி சகோ.ஏ.தர்வேஷ் முஹம்மது அவர்களுக்கும் இம்மன்றம் பாராட்டுக்களையும் நன்றிதனையும் தெரிவிக்கின்றது.
2 - இன்ஷா அல்லாஹ் அடுத்து 108 - வது செயற்குழுவை வரும் டிசம்பர் மாதம் 15-ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணியளவில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
பிரார்த்தனை:
சகோ, எம்.டபிள்யூ. ஹாமீத் ரிபாய், நன்றி நவில, சகோ. முஹம்மது இப்ராஹிம் புஹாரி ஆலிம் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
காயலின் சுவைகுன்றா மணத்துடன் களரி சாப்பாடு மதிய உணவாக விருந்தளிக்கப்பட்டது. இந்த சீர்மிகும் செயற்குழு கூட்ட ஏற்பாட்டினை சகோதரர்கள் ராபிக் -ஏ.பி.அபூபக்கர், ஆஷிக், காழி அலாவுத்தீன், அபூபக்ர் சித்தீக், சிஹாபுத்தீன், சல்மான் பாரிஸ் மற்றும் எஸ்.ஹெச்.நெய்னா முஹம்மது ஆகியோர் சிறப்பாக அமைத்து தந்தனர்.
இந்த மகத்தான செயற்குழு கூட்டத்திற்கு சகோ.முஹம்மது ஆதம் சுல்தான், சகோ.பொறியாளர் நெய்னா முஹம்மது, சகோ.கலவா முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் அனுசரணை வழங்கி சிறப்பித்தார்கள்.
அன்போடு வரவேற்று கனிவாக உபசரித்த யான்பு வாழ் காயலர்களுக்கு மனமார்ந்த நன்றி கூறி மாலை 04:30 மணியளவில் பிரியா விடைபெற்று, வழியில் மக்ரிப், இஷா தொழுகைகளை நிறைவேற்றி இரவு 09:00 மணியளவில் இறையருளால் ஜித்தா வந்தடைந்தனர். இப்பயணமும், இந்நிகழ்வும் சிறப்பாக நடந்தேற உதவி புரிந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
10.11.2017.
|