காயல்பட்டினம் சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) மீன்பிடி தள வழக்கில், பசுமைத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள உத்தரவு விபரங்களை, அவ்வழக்கைத் தொடர்ந்துள்ள ‘மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு – மெகா’ வின் சமூக ஊடகக் குழுமமான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் - மீன்வளத்துறை மூலமாக மீன்பிடி தளம் - முறையான CRZ அனுமதிபெறப்படாமல் கட்டப்பட்டு வருவது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் - நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association; MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் தொடர்ந்த வழக்கில் - நவம்பர் 20 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு விபரங்கள் தற்போது பெறப்பட்டுள்ளன:
1ஆம் எதிர்மனுதாரரான - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் - இவ்வழக்கு சம்பந்தமான நோட்டீஸ் பெற்றுவிட்டதா என பதிவாளர் உறுதி செய்யவேண்டும்.
ஆகஸ்ட் 11, 2017 தேதிய ஆணைப்படி, 4ஆம் எதிர்மனுதாரர் (மாசு கட்டுப்பாட்டு வாரியம்) - நிலைமை அறிக்கை - தாக்கல் செய்ய பணிக்கப்பட்டிருந்தார். ஒரு முறை வழக்கு தள்ளிப்போடப்பட்டும், செப்டம்பர் 21, 2017 அன்று காலநீட்டிப்பு வழங்கப்பட்டபிறகும் - நிலைமை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
செப்டம்பர் 21, 2017 ஆணைப்படி - செப்டம்பர் 19 அன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இரு மாதங்கள் ஆனபிறகும், நிலைமை அறிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பதை நியாயப்படுத்த இயலாது. 4வது எதிர்மனுதாரர், தவறாமல் - 10 தினங்களுக்குள், நிலைமை அறிக்கை தாக்கல் செய்ய பணிக்கப்படுகிறார். இதர எதிர்மனுதாரர்களும், தங்கள் பதிலை தாக்கல் செய்யவேண்டும்.
டிசம்பர் 8, 2017 அன்று இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு கொண்டுவரவும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 22, 2017; 9:30 pm]
[#NEPR/2017112203]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|