தூத்துக்குடி மாவட்ட கால்பந்து லீக் போட்டியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் – KSC அணி தொடர்ந்து 3ஆவது முறையாக இறுதிப் போட்டியில் வென்றதையடுத்து, ‘ஹாட்ரிக் சாம்பியன்’ ஆகியுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு மண்டலங்களில் நடைபெறும். இவ்விரு மண்டலங்களில் முதல் இரண்டு இடங்கள் பெற்று வெற்றி பெறும் அணிகள் சூப்பர் லீக் எனும் நாக் அவுட் சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெறும்.
இவ்வாண்டு காயல்பட்டினம் KSC, USC, சாகுபுரம் DCW, வீரபாண்டியன்பட்டினம், புன்னைக்காயல், நாசரேத் ஆகிய அணிகளை உள்ளடக்கிய திருச்செந்தூர் மண்டலத்தில் நடைபெற்ற லீக் போட்டிகளில் புள்ளிகள் பட்டியலில் KSC முதல் இடத்தையும், USC இரண்டாம் இடத்தையும் பெற்று சூப்பர் லீக் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட அணிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மண்டலத்திலிருந்து ஸ்பிரிட்டட் யூத், SDAT அணிகள் முதல் இரண்டு இடங்களை பெற்று சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றன.
சூப்பர் லீக் நாக் அவுட் போட்டிகள் கடந்த மார்ச் 23 முதல் 25ஆம் நாள் வரை தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
முதலாவது போட்டியில் KSC - SDAT அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தில் இவ்விரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் சமநிலையில் முடிய, சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில் KSC அணி 4 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.
இரண்டாவது போட்டியில் தூத்துக்குடி ஸ்பிரிட்டட் யூத் - USC அணிகள் விளையாடியதில், ஸ்பிரிட்டட் யூத் அணி 4 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.
KSC - ஸ்பிரிட்டட் யூத் அணிகளுக்கிடையேயான இறுதி போட்டி மார்ச் 25ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணிக்கு நடைபெற்றது.
ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமனில் முடியவே, சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில் KSC அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இவ்வெற்றியுடன் – தொடர்ந்து 3 முறை மாவட்ட கால்பந்து இறுதிப் போட்டியில் வென்றமையால், ‘ஹாட்ரிக் சாம்பியன்’ என்ற தகுதியைப் பெற்றுள்ளது காயல்பட்டினம் KSC அணி.
KSC அணியின் முன்கள வீரர்கள் மஜீத் அலி, முஹம்மது அலி, ஸ்பிரிட்டட் யூத் கோல் கீப்பர் ஜீமன் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டனர்.
முன்னதாக, இறுதி போட்டியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட KSCயின் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மானுக்கு ஈரணி வீரர்களும் மைதானத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக பொருளாளர் ப்ரின்ஸ்டன், முன்னாள் பொருளாளர் ஆல்ட்ரின் மிராண்டோ, KSC தலைவர் வாவு செய்யித் அப்துர் ரஹ்மான், அதன் செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி ஆகியோருடன் - மாவட்ட கால்பந்து நிர்வாகிகளும் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற - வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு சுழற்கோப்பையும், வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினர்.
இறுதிப் போட்டியைக் காண காயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து திரளான கால்பந்துப் பிரியர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து ஆட்டத்தைக் கண்டு களித்தனர்.
KSC அணியினர் கடந்த 6 ஆண்டுகளில் திருச்செந்தூர் மண்டல அளவில் நடைபெற்ற கால்பந்து லீக் போட்டிகளில் 2013, 2014, 2015, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் முதலிடத்தையும், 2016ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பெற்று தொடர்ந்து 6 முறை சூப்பர் லீக் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். அதில் 2013, 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் சூப்பர் லீக் நாக் அவுட் போட்டிகளில் முதல் இடம் பெற்று மாவட்ட சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
திருச்செந்தூர் போன்ற மண்டலங்களிலிருந்து இது போன்ற தொடர் வெற்றிகளை குவிப்பதுக் இதுவே முதன்முறை என்றும், இது ஒரு மகத்தான சாதனை என்றும் தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் ப்ரின்ஸ்டன் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டமை கூடுதல் தகவல்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைக் குவித்து வரும் காயல்பட்டினம் KSC அணியின் பயிற்றுநராக செய்யித் முஹ்யித்தீன் திறம்பட செயலாற்றி, தனிப்பட்ட தன்னார்வத்துடன் வீரர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் முழுத் தகுதியுடன் விளையாடி வெற்றிகளை ஈட்டிடப் பெருங்காரணியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
முத்து இப்றாஹீம் (ஹாங்காங்) &
K.K.S.முஹம்மத் ஸாலிஹ் (சீஷெல்ஸ்)
|