காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி காலாவதியாகாத நிதியே என TNUIFSL அமைப்பின் மூத்த துணைத் தலைவர், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்குத் தகவல். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் ஐந்து பிரதான சாலைகளை (அப்பாபள்ளி தெரு, சொலுக்கார் தெரு, மஃதூம் தெரு, செப்புக்குடைஞ்சான் தெரு, சதுக்கை தெரு), TURIP 2017-18 திட்டத்தின் கீழ், PAVER BLOCK முறைக்கொண்டு - 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புனரமைக்க, காயல்பட்டினம் நகராட்சி - ஒப்பந்தப்புள்ளிகளை, ஜனவரி மாதம் கோரியிருந்தது.
இச்சாலைகளுக்கு PAVER BLOCK முறை பொருத்தமாக இருக்காது என அப்பகுதி மக்கள் / ஜமாஅத்துகள் கையொப்பம் இட்ட மனு, நகராட்சி ஆணையர் உட்பட நகராட்சி நிர்வாகத்துறை சம்பந்தமான அனைத்து துறைகளுக்கும் ஜனவரி மாதம் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் - PAVER BLOCK முறைக்கு பதிலாக தரமான தார் சாலை போடவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மூலம் பதில் வழங்கியிருந்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம், நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையர் (CMA) உடைய நிர்வாக ஒப்புதல் கோரி (Administrative Sanction) கடிதம் அனுப்பப்படும் என தெரிவித்திருந்தார்.
பொது மக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் அலுவலகமும், நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தி கடிதம் எழுதி, அக்கடிதத்தின் நகலை, நடப்பது என்ன? குழுமத்திற்கும் அனுப்பியிருந்தது. இக்கடிதத்தின் நகல் மற்றும் விபரங்கள் - சம்பந்தப்பட்ட ஜமாஅத்துகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த செய்தித்தொடர்புத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களும், தார் சாலையாக மாற்றிட பரிந்துரைத்து உள்ளாட்சி துறை அமைச்சர் திரு வேலுமணிக்கு வேண்டுகோளும் கடந்த ஜனவரி மாதம் வைத்தார்.
இதற்கிடையே - இது சம்பந்தமாக, தன்னை சந்திக்க வரும் நபர்களிடம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், இச்சாலைகளை PAVER BLOCK கொண்டு புனரமைக்க TURIF திட்டத்தை பராமரிக்கும் TAMILNADU URBAN INFRASTRUCTURE FINANCIAL SERVICES LIMITE (TNUIFSL) அமைப்பு கூறியதாக தெரிவித்து வருகிறார் என தெரிகிறது. மேலும் - உடனடியாக PAVER BLOCK சாலைகள் அமைக்கப்படவில்லை என்றால் அரசுக்கு நிதி திரும்பிவிடும் என்றும் கூறி வருகிறார் என தெரிகிறது.
இது சம்பந்தமான விளக்கம் பெற - நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், சென்னையில் உள்ள TNUIFSL அமைப்பின் மூத்த துணைத்தலைவர் (திட்டங்கள்) திரு டி.ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்தது.
TNUIFSL அமைப்பு - எந்த உள்ளாட்சி மன்றத்தையும், குறிப்பிட்ட வகை சாலை தான் போடவேண்டும் என கூறுவதில்லை என்றும், அவ்வாறு காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் ஏதாவது ஆவணம் இருப்பின் அதனை பெற்று தரவும் அவர் கூறினார்.
இத்திட்டத்திற்கு என காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பணம் திரும்பி விடும் என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் கூறுவது குறித்தும் அவரிடம் வினவப்பட்டது. அதற்கு பதில் வழங்கிய திரு டி.ராஜேந்திரன் - TURIF திட்டம் மூலம் வழங்கப்படும் நிதி காலாவதியாகாத நிதி (NON-LAPSABLE FUND) என்றும், திரும்பாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 23, 2018; 4:00 pm]
[#NEPR/2018032302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|