காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று (05.04.2018. வியாழக்கிழமை) தமிழகம் முழுக்க கடையடைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, காயல்பட்டினத்தில் நேற்று காலை முதல் 18.00 மணி வரை கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கூலக்கடை பஜார், முதன்மைச் சாலை ஆகியன வெறிச்சோடிக் காணப்பட்டன.
இப்போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதென்றும், இணைந்து போராடுவதென்றும், பேருந்து நிலையம் அருகில் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இணைந்து பங்கேற்பதென்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் – 04.04.2018. புதன்கிழமையன்று 20.00 மணிக்கு நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
நேற்று 10.00 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதமைக்காக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசைக் கண்டித்தும், இக்கோரிக்கையை முறையாக வலியுறுத்தத் தவறியதாக – தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும் இவ்வார்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் இவ்வார்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
|