காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் சாவடியை, மக்களின் உணர்வுகளைக் கருத்திற்கொண்டு அகற்றிட ஆவன செய்யக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் சாவடி (POLICE BOOTH) ஒன்று அண்மையில் நிறுவப்பட்டது. இதை எதிர்த்தும், அப்புறப்படுத்தக் கோரியும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அம்மனு மீதான நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – துணை கண்காணிப்பாளருக்கும் அனுப்பி வைத்தனர்.
அதனடிப்படையில், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திரு. சம்பத், “நடப்பது என்ன?” குழுமத்தினரிடம் – மனு குறித்து - திங்களன்று விசாரணை நடத்தினார். அவரிடம் குழுமம் சார்பில் முழு விளக்கம் அளிக்கப்பட்டது.
மக்களின் பாதுகாப்பிற்கு காவல்துறையின் பங்கு மிக அவசியம் என்றும், அதே நேரத்தில் - நகரின் பாரம்பரியத்தையும், மக்களின் உணர்வுகளையும் கருத்திற்கொண்டு, பேருந்து நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள காவல்துறை சாவடியை உடனடியாக அகற்றிட ஆவன செய்யுமாறும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக - தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜுவிற்கு - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - இக்கோரிக்கையை வலியுறுத்தி தற்போது மனு வழங்கப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட துறைகளை தொடர்புகொண்டு, காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாக முகப்பில் நிறுவப்பட்டுள்ள காவல்துறை சாவடியை அப்புறப்படுத்த ஆவனம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 5, 2018; 5:30 pm]
[#NEPR/2018040502]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|