சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட குடும்ப சங்கம நிகழ்ச்சியில், ஒருநாள் ஊதிய நன்கொடை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டு, மன்றக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
குடும்ப சங்கமம்:
நடப்பாண்டு 2018 ஏப்ரல் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூரிலுள்ள அலோஹா லோயங் சுற்றுலா காட்டேஜில் வைத்து சிங்கப்பூர் காயல் நல மன்றத்தினரின் குடும்ப ஒன்றுகூடல் நடைபெற்றது. நிகழ்விடத்திற்கு உறுப்பினர்கள் வந்து சேர மதியம் 2:30 மணிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்து வசதி செய்யபட்டிருந்தது. மாலை 4:45 மணிக்கு இமாம் ஜமாஅத்துடன் அஸர் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின்னர் குடும்ப சங்கம நிகழ்வு துவங்கியது.
வரவேற்புச் சிற்றுண்டி:
அனைவருக்கும் சிற்றுண்டியாக காயல் இஞ்சி டீயும், பருப்பு வடையும், இனிப்பு, உறப்பு மாங்காய் ஊறுகாயும் பரிமாறப்பட்டது.
குழந்தைகளுக்கு சுவையான மேங்கோ ஐஸ்க்ரீமும் வழங்கப்பட்டது.
இரவு உணவுக்காக சகோதரர் உமர் அனஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மற்ற உறுப்பினர்கள் நண்பர்களின் சந்திப்பில் சுவரஸ்யமாக கலந்துரையாடி மகிழ்ந்தனர். பெண்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தனியறைகளில் ஒன்றுகூடி ஊர் நடப்புகளை பகிந்து கொண்டிருந்தனர்.
அங்கிருந்த பிரம்மாண்டமான நவீன நீச்சல்குளத்தில் குழந்தைகள் குதூகலத்துடன் குளியல் போட தயாரகிக் கொண்டிருந்தனர்.
மின்னல் மற்றும் சிறிதாக மழைச்சாரல் விழவே நீச்சல்குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது எனும் அறிவிப்பு பலகையைக் கண்டதும், ஆவலுடன் குளிக்க காத்திருந்த குழந்தைகள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாயினர். வானிலை இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் இரண்டரை மணி நேரமாகலாம் என நீச்சல்குளத்தின் பாதுகாப்பாளர் அறிவித்தார். இதனால் மழலைகள் முக வாட்டத்துடன் காணப்பட்டனர்.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
மஃரிப் வேளை வந்ததும் பாங்கு சொல்லப்பட்டு ஹாஜி-பாளயம் முஹம்மது ஹஸன் அவர்கள் இமாமத் செய்ய உறுப்பினர்கள் கூட்டாக மஃரிப் தொழுகையை நிறைவேற்றினர். வருடாந்திர பொதுக்குழு நிகழ்வின்போது மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தமது ஒருநாள் ஊதியத்தை காயலர் நலப்பணி திட்டங்களுக்கு வழங்குவது வழக்கம்.
உறுப்பினர்களிடமிருந்து நன்கொடையை பெறுவதற்காக காலி கடித உறைகள் அனவருக்கும் வழங்கப்பட்டன. அனைவரும் ஒன்றுகூடி காட்டேஜ் வளாகத்தில் அமர்ந்தனர்.
அல் ஹாஃபிழ் அஹ்மத் அவர்கள் திருமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தர். மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளயம் முஹம்மத் ஹஸன் அவர்கள் வரவேற்புரை நிகழத்தினார். மன்றத்தின் செயலாக்கம் மற்றும் சதாக்கா எனும் கொடை குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து உறுப்பினர்களின் ஒருநாள் ஊதிய நன்கொடைக்கான உறைகளை சேகரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் அனைவரும் தமது பங்கை செலுத்தினர்.
இதில்பெறப்படும் தொகை காயலர் நலப்பணி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும். ஒவ்வொரு வருடமும் இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அல்-ஹாஃபிழ் அஹ்மத் அவர்கள் துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
உறுப்பினர்களிடமிருந்து ஒருநாள் ஊதிய நன்கொடை சேகரிக்கப்பட்ட பெட்டி திறக்கப்பட்டு, அதில் உறுப்பினகளிடமிருந்து பெறப்பட்ட மொத்த தொகை இந்திய மதிப்பின்படி 2,50,000 (இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய்) என மன்றத்தின் கணக்காளர் முஹம்மது ரிஃபாயி அறிவித்தார். அத்தொகை மன்றத்தின் இருப்பு கணக்கில் சேர்க்கப்பட்டது.
இரவுணவு:
இரவு இஷா ஜமாஅத் தொழுகைக்குப் பிறகு, சகோதரர் உமர் அனஸ் அவர்களின் கை வண்ணத்தில் காயலின் பாரம்பரிய உணவான கலறிகறி, மாங்காய்கறி, நெய்ச்சோறு (ஸஹன் சாப்பாடு) பரிமாறப்பட்டது. சிட்டிக்கறி, போடு சோறு என இரவு உணவு களைகட்டியது. உள்ளூர் கலறிக்கு ஈடாக அதே மணமும், அதே சுவையுடன் கூடிய ஸஹன் சாப்பாட்டை சிங்கப்பூரில் சமைத்து அசத்திய உமர் அனஸ் அவர்களை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
அன்பளிப்பு:
மழலைகள் அனவருக்கும் விளையாட்டுப் பொருட்களும், மன்ற உறுப்பினர்களுக்கு அழகிய வண்ணங்களில் முஸல்லா விரிப்புகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இரவு 10.00 மணிக்கு சிலர் விடைபெற்று வீடு திரும்பினர். இரவு தங்கும் வசதி செய்யப்பட்டிருந்ததால் சிலர் இரவில் தங்கியிருந்தனர். நள்ளிரவில் அவர்களுக்கு இஞ்சி ஏலக்காய் போட்ட ப்ளைன் டீ வழங்கப்பட்டது. ஆண்கள் ஆண்கள் பகுதியிலும் பெண்கள் பெண்கள் பகுதியிலும் இரவு நீண்ட நேரம் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.
புறப்பாடு:
மறுநாள் திங்கட்கிழமை அதிகாலையில் ஸுப்ஹ் தொழுகைக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு அல் ஹாஃபிழ் அஹ்மத் அவர்கள் இமாமத் செய்ய ஸுப்ஹ் தொழுகை ஜமாஅத்துடன் நிறைவேற்றினர்.
பின் தேநீர் அருந்திய உறுப்பினர்கள் சிலர் தம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஆயத்தமாகி, தத்தம் குடும்ப அங்கங்கத்தினருடன் புறப்பட்டுச் சென்றனர். தங்கியிருந்த மற்ற உறுப்பினர்களுக்கு காலை உணவாக 7;30 மணிக்கு சுவையான கறி சேமியாவும், தேநீரும் பரிமறப்பட்டன.
சிறிது ஓய்வுக்கு பிறகு உறுப்பினர்கள் புறப்பட ஆயத்தமாயினர். காலை 9:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன்ங்களில் அனைவரும் மன நிறைவுடன் தமது இல்லம் திரும்பினர். எல்லா புகழும் இறைவனுக்கே!
நிகழ்வினை ஏற்பாடு செய்து திறம்பட செயல்படுத்திய ஒருங்கிணைப்பு குழுவினருக்கும், சுவையான உணவுகளை குறித்த நேரத்தில் தயாரித்து வழங்கிய உணவு ஏற்பாடு குழுவினருக்கும் சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & படங்கள்:
M.N.L.முஹம்மத் ரஃபீக்
(செய்தி தொடர்பாளர், சிங்கை கா.ந.மன்றம்.) |