காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவல் சாவடி தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வழங்கிய மனு குறித்து, குழும நிர்வாகிகளிடம் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தினார். உரிய விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் சாவடி ஒன்று அண்மையில் நிறுவப்பட்டது. இதை எதிர்த்தும், அப்புறப்படுத்தக் கோரியும் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அம்மனு மீதான நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – துணை கண்காணிப்பாளருக்கும் அனுப்பி வைத்தனர்.
அதனடிப்படையில், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திரு. சம்பத் அவர்கள், “நடப்பது என்ன?” குழுமத்தினரிடம் – மனு குறித்து விசாரணை நடத்தினார். அவரிடம் குழுமம் சார்பில் முழு விளக்கம் அளிக்கப்பட்டது.
மக்களின் பாதுகாப்பிற்கு காவல்துறையின் பங்கு மிக அவசியம் என்றும், அதே நேரத்தில் - நகரின் பாரம்பரியத்தையும், மக்களின் உணர்வுகளையும் கருத்திற்கொண்டு, பேருந்து நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள காவல்துறை சாவடியை உடனடியாக அகற்றிட ஆவன செய்யுமாறும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப் பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 02, 2018; 4:30 pm]
[#NEPR/2018040204]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|