காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில், 2018 - 2019 பருவத்திற்கான குருதிக் கொடைத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கடந்த ஏப்ரல், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் - நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைப்பில், அரசு இரத்த வங்கிகளுடன் இணைந்து - மூன்று இரத்த தானம் முகாம்கள், காயல்பட்டினத்தில் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலமாக - சுமார் 250 பேர் இரத்த தானம் செய்தனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இரத்த தானம் செய்தவர்களின் எண்ணிக்கை (250) - நகரின் மக்கள் தொகையான சுமார் 50,000 இல் - 0.5 சதவீதம் ஆகும். உலக சுகாதார அமைப்பு (WORLD HEALTH ORGANISATION; WHO), மக்கள் தொகையில் குறைந்தது 1 சதவீதம் பேர் இரத்த தானம் செய்தால், நாட்டின் இரத்த தேவை பூர்த்தியாகும் என தெரிவிக்கிறது.
இந்திய அரசின் தேசிய இரத்த கொள்கை (NATIONAL BLOOD POLICY), தன்னார்வலர் மூலமான இரத்த தானம் அதிகரிக்கப்படவேண்டும் என்றும், இதற்காக தன்னார்வலர்கள் கலந்துக்கொள்ளும் இரத்த தானம் முகாம்கள் - அரசு மூலமாகவும், தனியார் தொண்டு அமைப்புகள் மூலமாகவும் நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
இறைவன் நாடினால் - 2018 - 2019 பருவ காலத்தில், மக்கள் தொகையில் குறைந்தது 1 சதவீதம் கொடையாளர்கள் (500 பேர்) என்ற இலக்கை எட்டும் நோக்கில், குறைந்தது 4 முகாம்களை நடப்பது என்ன? நடத்திட திட்டமிட்டுள்ளது.
2018 - 2019 பருவக்காலத்தின் முதல் இரத்த தான முகாம் - இறைவன் நாடினால் - ஏப்ரல் 4 புதனன்று, காயல்பட்டினம் ரத்தினாபுரியில் உள்ள ரஜாக் மருத்துவமனை வளாகத்தில் வைத்து, காலை 9:30 முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் இரத்த வங்கியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த முகாமினை, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் சமூக ஊடகப்பிரிவான நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைக்கிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 30, 2018; 10:00 pm]
[#NEPR/2018033002]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|