மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு குருதி தேவைப்படுகையில், மாற்றுக் கொடையாளர்களைக் கேட்பதைத் தடுக்கும் அரசு கொள்கை முடிவை விரைவில் வெளியிடுமாறு, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலரிடம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு இரத்தம் தேவைப்படும் போது, சில மருத்துவமனைகள் - இரத்த வங்கியை நாடாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரின் குடும்பத்தினரிடம் இரத்தம் கேட்பது (REPLACEMENT BLOOD DONORS) காலகாலமாக நடைமுறையில் உள்ளது. இதனால் ஏற்கனவே பல வகைகளில் மனஉளைச்சலில் உள்ள குடும்பத்தினர், கூடுதலான நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
ஜூன் 2003 இல் வெளியிடப்பட்ட தேசிய இரத்த கொள்கை,(NATIONAL BLOOD POLICY) காலக்கெடு விதிக்கப்பட்டு - மாற்று கொடையாளர்கள் கேட்கும் வழக்கும் படிப்படியாக நிறுத்தப்படவேண்டும் என தெரிவிக்கிறது.
The practice of replacement donors shall be gradually phased out in a time bound programme to achieve 100% voluntary non-remunerated blood donation programme (National Blood Policy; June 2003)
இந்த கொள்கை அறிவிப்பு வெளியாகி 15 ஆண்டுகள் ஆகியும், மாற்று கொடையாளர்கள் கேட்கும் நடைமுறை முற்றிலும் முடிவுக்கு வரவில்லை.
நோயாளிகளுக்கு இரத்தம் தேவை ஏற்படும்போது - அதனை பூர்த்தி செய்யும் கடமை அந்த மருத்துவமனையுடையது; அவர்கள் உரிமம் பெற்றுள்ள இரத்த வங்கிகளோடு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் தேசிய இரத்த தான கொள்கை தெரிவிக்கிறது.
Institutions who prescribe blood for transfusion shall be made responsible for procurement of blood for their patients through their affiliation with licensed blood centres (National Blood Policy; June 2003)
இந்த நடைமுறையை படிப்படியாக நிறுத்துவதற்கு மாநில அரசுகள் திட்டம் வகுக்கவேண்டும் என்றும் தேசிய இரத்த தான கொள்கை தெரிவிக்கிறது.
State/UT Blood Transfusion Councils shall develop an action plan to ensure phasing out of replacement donors (National Blood Policy; June 2003)
ஆனால் இது வரை - தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசாங்கங்கள் இது சம்பந்தமான காலக்கெடுகொண்ட அறிவிப்பை வெளியிடவில்லை.
மாநில அளவிலான, மாற்று இரத்த கொடையாளர்களை கேட்கும் நடைமுறைக்கு காலக்கெடு விதித்து, அந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான மாநில கொள்கை அறிவிப்பை விரைவில் வெளியிடக்கோரி - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, சென்னையில் - சுகாதாரத்துறையின் அரசு முதன்மை செயலர் திரு ஜெ.ராதாகிருஷ்ணன் IAS இடம், கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 30, 2018; 9:30 am]
[#NEPR/2018033001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|