தமது ஜமாஅத்திற்குட்பட்ட பகுதிகளில் தரமான தார் சாலையை விரைந்து அமைத்திடக் கோரி, காயல்பட்டினத்தின் 6 ஜமாஅத்துகள் சார்பில் நகராட்சி ஆணையரிடம் நேரில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
TURIP 2017-18 திட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் - நகரின் அப்பாபள்ளி தெரு, சொழுக்கார் தெரு, மகுதூம் தெரு, செப்புக்குடைஞ்சான் தெரு, சதுக்கை தெரு என்ற ஐந்து சாலைகளுக்கு, PAVER BLOCK முறைக்கொண்டு சாலைகளை புனரமைக்க - காயல்பட்டினம் நகராட்சி ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தது.
காயல்பட்டினம் நகராட்சியில் PAVER BLOCK முறையில் சாலைகளை அமைக்க பொது மக்கள், கடந்த காலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். 15.1.2018 தேதிய கடிதம் மூலம், ஜனவரி 22 அன்று மாவட்ட ஆட்சியரிடம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தரமான தார் சாலை அமைக்க கோரியும், ஜமாஅத்துகள் மற்றும் பொது மக்களின் கையெழுத்துடன் - மனு வழங்கப்பட்டது. இதே மனு - நகராட்சி நிர்வாகத்துறையின் பிற அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவிற்கு, ஜனவரி 25 அன்று பதில் வழங்கிய நகராட்சி ஆணையர் - இது சம்பந்தமாக நிர்வாக ஒப்புதல் கோரி, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) அவர்களுக்கு கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக திருநெல்வேலி நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் (RDMA) அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்த மனுவிற்கு, நடவடிக்கை எடுக்கக்கோரி, மண்டல இயக்குனரும் - ஜனவரி 25 அன்று ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மனு வழங்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே - தத்தம் ஜமாஅத்துகள் சார்ந்த சாலைகளில், PAVER BLOCK சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, தரமான தார் சாலை அமைக்கும் பணியை துரிதமாக துவங்கிட கோரி - புதுப்பள்ளி, முஹைதீன் பள்ளி , அப்பாபள்ளி, மரைக்கார் பள்ளி, மகுதூம் பள்ளி மற்றும் குருவித்துறைப்பள்ளி ஜமாஅத்துகள் சார்பாக, மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 26, 2018; 1:00 pm]
[#NEPR/2018032601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|