சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திவரும் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூடக்கோரி போராட்டங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்துவருகின்றன.
பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்த ஆலைக்கெதிராக, திருச்செந்தூர் வட்டாரப் போராட்டக் குழுவின் சார்பில், ஆலை எதிர்ப்பு & சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளுக்கெதிரான அத்துமீறலுக்காக அதன் மீது நடவடிக்கை கோரி, திருச்செந்தூர் தியாகி பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து பேரணி நேற்று (03.04.2018. செவ்வாய்க்கிழமை) 16.00 மணிக்குப் புறப்பட்டு, 17.00 மணியளவில் திருச்செந்தூர் தேரடி திடலை அடைந்தது.
தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆலையின் விதிமீறல்களைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருச்செந்தூரிலிருந்தும், சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினத்திலிருந்து, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) உடைய சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” குழுமம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட பொது நல அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு, தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
அன்று உள்ளூரிலிருந்த “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்ட இப்போராட்டத்தில் – பொதுமக்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக - தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலை, காயல்பட்டினம் நகராட்சிக்குள் இயங்கும் டி.சி.டபிள்யு. அமிலக் கழிவு ஆலை, கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட ஆலைகளுக்கெதிராக ஒன்றிணைந்து ஒரே குரலில் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று, “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ வலியுறுத்திப் பேசியமை குறிப்பிடத்தக்கது.
|