காயல்பட்டினத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் நாள் முதல் இதமழை பெய்து வருகிறது. அக்டோபர் 06ஆம் நாள் வரை இடைவெளி விட்டு விட்டுப் பெய்த மழை - அக்டோபர் 07ஆம் நாளிலிருந்து வடகிழக்குப் பருவமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிக்கை வெளியிட்ட நாள் முதல் பொய்த்துப் போனது.
அக்டோபர் 15ஆம் நாள் முதல் வடகிழக்குப் பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மய்யம் மீண்டும் அறிவித்த நிலையில், நேற்று வரை நகரில் மழை பொழிவு இல்லை. வெயில் வாட்டி வதைக்கிறது.
இவ்வாறிருக்க, நேற்று (17.10.2018. புதன்கிழமை) 15.00 மணியளவில் காயல்பட்டினம் சுற்றுவட்டாரங்களிலும், காயல்பட்டினத்தில் எல்.எஃப். வீதியிலும் – வானம் கருமேகங்கள் திரளக் கறுத்து, திடீரென இதமழை பெய்தது. இம்மழை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
ஆனால், இவ்வளவு அமர்க்களம் நடந்த அவ்வேளையில் - மகாத்மா காந்தி நினைவு வளைவுக்குப் பிறகுள்ள பகுதிகளில் சாரலைத் தவிர – குறிப்பிடத்தக்க அளவில் மழையே இல்லை. இதுவே பொதுமக்களின் பேசுபொருளாகிவிட்டது. |