காயல்பட்டினத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் நாள் முதல் இதமழை பெய்து வருகிறது. அக்டோபர் 06ஆம் நாள் வரை இடைவெளி விட்டு விட்டுப் பெய்த மழை - அக்டோபர் 07ஆம் நாளிலிருந்து வடகிழக்குப் பருவமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிக்கை வெளியிட்ட நாள் முதல் பொய்த்துப் போயிருந்தது. அடுத்தடுத்த நாட்களில் வெயில் ஒளிர்ந்து, வெப்ப வானிலையே நீடித்து வந்த நிலையில், எப்போதாவது சாரல், சிறுமழை தூவிச் செல்லும்.
இனி மழை பெய்யாமல் போய்விடுமோ என மக்கள் ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்க, அக்டோபர் 21 ஞாயிற்றுக்கிழமையன்று 20.30 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் பெரும்பெரும் துளிகளாக கனமழை பெய்யத் துவங்கியது. மறுநாள் (22.10.2018. திங்கட்கிழமை) 08.30 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் மழை பெய்து ஓய்ந்தது. இதனால் நகரில் பெரும்பாலும் அனைத்துத் தெருக்களின் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
மாவட்ட நிர்வாகத்திலிருந்து பெறப்பட்ட மழைப்பொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 62 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
இவ்வாறிருக்க, 22.10.2018. திங்கட்கிழமையன்றும் 20.30 மணிக்கு – முந்தைய நாள் போலவே இடி, மின்னலுடன் சாரல் துவங்கியது. பெருமழை பெய்யும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அது சில நிமிடச் சாரலிலேயே முடிந்து போனது. |