காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் சாவடி அமைக்க காவல்துறை அனுமதி வழங்கப்படவில்லை என்ற தகவலை, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், மார்ச் மாதம் - ஆறுமுகநேரி காவல்நிலையம் ஏற்பாட்டில், காவல்துறை சாவடி (POLICE BOOTH) ஒன்று நிறுவப்பட்டது.
காலகாலமாக காவல்நிலையம் இல்லாத ஊர் என்ற பெயர் பெற்றிருந்த காயல்பட்டினம் நகரில் - காவல்துறை சாவடி அமைக்கப்பட்டது, நகரில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது.
மெகா | நடப்பது என்ன? குழுமம் உட்பட நகரின் பல அமைப்புகள் - நகரின் பாரம்பரியத்தையும், பொதுமக்களின் உணர்வினையும் கருத்தில் கொண்டு - காவல்துறை சாவடியை அகற்றிட வேண்டுகோள் வைத்தனர். இருப்பினும் 7 மாதங்கள் நிறைவுற்றும், இது வரை காவல்துறை சாவடி அகற்றப்படவில்லை.
இதற்கிடையே - காயல்பட்டினம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில், காவல்துறை சாவடி அமைத்திட - நகராட்சி அனுமதிபெறப்பட்டதா என்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான கேள்விக்கு, நகராட்சியிடம் அனுமதி பெறப்படவில்லை என்ற பதில், காயல்பட்டினம் நகராட்சி தரப்பில் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் - காவல்துறை சாவடி அமைத்திட - அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்வி வினவப்பட்டிருந்தது.
இக்கேள்விக்கான தகவலை - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக வழங்காமல் - இது குறித்த தகவலை, ஆறுமுகநேரி காவல்நிலையத்திடம் கோரியிருந்தது. தற்போது - இது குறித்து, ஆறுமுகநேரி காவல்நிலையம் - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பதில் வழங்கியுள்ளது. அதன் நகல் - மெகா | நடப்பது என்ன? குழுமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதில் -
காவல் புறக்காவல் நிலையம் (OUTPOST) என்று அமைத்திட மட்டுமே அரசு ஆணை பிறப்பிக்கப்படும்; மேலும் ஆறுமுகநேரி காவல்நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட காயல்பட்டினம் பேருந்து நிறுத்தம் எதிரில் வைக்கப்பட்டுள்ளது காவல் உதவி மையம் (POLICE BOOTH) என்பதால் காவல்துறை ரீதியான உத்தரவு ஏதும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி மற்றும் ஆறுமுகநேரி காவல்நிலையங்கள் வழங்கியுள்ள பதிலகள் மூலம் - காயல்பட்டினம் பேருந்து நிலையம் வளாகத்தில் காவல்துறை சாவடி அமைக்க - நகராட்சியின் அனுமதியோ, தமிழக காவல்துறையின் எந்த உத்தரவோ பெறப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 23, 2018; 7:30 am]
[#NEPR/2018102301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|