காயல்பட்டினத்தில், சொத்து வரி அதிகரிப்பு தொடர்பாக, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) டாக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் உடன், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் வசூல் செய்யப்படும் சொத்துவரி - அடிப்படை கட்டணம் - பல மடங்கு உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் அறிவிப்பு வெளியாகியது.
30 தினங்கள் வரையில் பொதுமக்களின் ஆட்சேபனைகள் பெறப்படும் என நகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்ததை தொடர்ந்து, நடப்பது என்ன? குழுமம் சார்பாகவும், பொது மக்கள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பாகவும் ஆட்சேபனைகள் - முறையாக சமர்ப்பிக்கப்பட்டன.
குடியிருப்புகளுக்கு 50 சதவீதத்திற்கு மேலும், வியாபார இடங்களுக்கு 100 சதவீதத்திற்கு மேலும் உயரக்கூடாது என அரசு அறிவித்திருந்தாலும், காயல்பட்டினம் நகராட்சியின் புதிய அடிப்படை வரி - 200 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டிருந்தது.
பொது மக்களின் ஆட்சேபனைகள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என நகராட்சி இதுவரை அறிவிக்காத சூழலில், வீடு வீடாக - சுயமாக நிரப்பும் சொத்து வரி படிவங்கள் (SELF ASSESSMENT FORM), நகராட்சி ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் ஆட்சேபனைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நகராட்சி அறிவிக்கும் வரை, நிரப்பிய படிவங்களை - பொதுமக்கள், நகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டாம் என நடப்பது என்ன? குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே - இன்று காயல்பட்டினம் வந்திருந்த காயல்பட்டினம் நகராட்சியின் பொறுப்பு ஆணையரும், தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையருமான டாக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் IAS - அவர்களை, நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகள் - இதுகுறித்து நேரில் சந்தித்தனர்.
அவ்வேளையில் - பொதுமக்களின் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை குறைத்திட - ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும் - ஆட்சேபனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைக்கப்பட்ட வரி தெரியாத சூழலில், பொது மக்கள் - படிவங்களை நிரப்ப இயலாது என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக தான் நடவடிக்கை எடுப்பதாக, ஆணையர் - அப்போது உறுதியளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 24, 2018; 7:00 pm]
[#NEPR/2018102402]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|