காயல்பட்டினம் புறவழிச்சாலையில் தெருவிளக்குகளை விரைந்து நிறுவிட நகராட்சி ஆணையர் (பொறுப்பு) டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை - செக் போஸ்ட் அருகில் இருந்து, தைக்கா தெரு.முனையில் உள்ள உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வரை இணைக்கும் சாலை MAJOR DISTRICT ROAD (MDR) சாலையாகும்.
பை பாஸ் சாலை என அழைக்கப்படும் இந்த சாலையை, திருநெல்வேலி - தூத்துக்குடி செல்ல பொது மக்கள், அனுதினமும் பயன்படுத்துகிறார்கள். சுமார் 4 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில், தெரு விளக்குகள் முழுமையாக இல்லை.
குறிப்பாக, இந்த சாலையின் மத்தியில், நகராட்சியினால் நிறுவப்பட்ட குடிநீர் அளவுமணி அறைக்கு அருகே உள்ள கோவில் பகுதியில் இருந்து சுமார் 10 கம்பங்கள், தெரு விளக்குகள் இல்லாமல் உள்ளன. இதன் காரணமாக, அடிக்கடி இப்பகுதியில் சிறு, சிறு விபத்துகள் நடந்து வருகின்றன.
இப்பகுதியில் வாழும் பொது மக்களின், நலன் - பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், இச்சாலையை தினமும் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பயணியர் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டும், தெரு விளக்குகள் நிறுவிட கோரி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் - நடப்பது என்ன? குழுமம் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதம் - அப்போதைய புதிய ஆணையர் திரு பிரேம் ஆனந்த் இடம் இதுகுறித்து நினைவூட்டல் செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில், சில மின்விளக்குகள் நிறுவப்பட்டன. இருப்பினும் - தேவையான அளவில் நிறுவப்படவில்லை. இதற்கு பல்வேறு மழுப்பல் காரணங்கள், பொறியியல் துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு வந்தது.
காயல்பட்டினம் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக தற்போது பணியாற்றிவரும் டாக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் IAS அவர்களை இன்று சந்தித்த நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், இது குறித்து எடுத்துரைத்தனர்.
விபரங்களை கேட்டறிந்த ஆணையர், நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) திரு சுரேஷ் அவர்களை உடனடியாக அழைத்து, மேலும் காலம்தாழ்த்தாமல் உடனடியாக தெரு விளக்குகளை, பை பாஸ் சாலையில் நிறுவிட உத்தரவிட்டார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 24, 2018; 9:30 pm]
[#NEPR/2018102403]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|