காயல்பட்டினத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் நாள் முதல் இதமழை பெய்து வருகிறது. அக்டோபர் 06ஆம் நாள் வரை இடைவெளி விட்டு விட்டுப் பெய்த மழை - அக்டோபர் 07ஆம் நாளிலிருந்து பெய்யவில்லை. மீண்டும் அக்டோபர் 22 முதல் மழை பெய்யத் துவங்கி, தொடர்ந்து பெய்து வருகிறது.
நேற்று (24.10.2018. புதன்கிழமை) 20.30 மணிக்கு சாரலாகத் துவங்கி, சிறிது நேரத்தில் இதமழையாகவும், பின்னர் கனமழையாகவும் மாறி, இன்று 07.30 மணி வரை பெய்து ஓய்ந்துள்ளது. இதனால் நகரில் பெரும்பாலும் அனைத்துத் தெருக்களின் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று பெறப்பட்டுள்ள மழைப்பொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 98.4 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
இன்று 08.30 மணி நிலவரப்படி, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதமான குளிர்ந்த வானிலை நிலவுகிறது. எந்நேரமும் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதை வானிலை உணர்த்துகிறது.
கனமழை காரணமாக, இன்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். |