காயல்பட்டினத்தில், சொத்து வரி அதிகரிப்பு ஆட்சேபனை மனுக்கள் மீதான நகராட்சி நடவடிக்கை என்ன என அறிவிக்கப்படும் வரை - நிரப்பிய சுயமதிப்பீட்டு படிவத்தை, பொதுமக்கள் நகராட்சியிடம் வழங்கவேண்டாம் என “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் சொத்துவரி அதிகரிப்பு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியாகியது. அதில் - முன்பிருந்த அளவைவிட பல மடங்கு, சொத்துவரி அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின், 30 தினங்களுக்குள் பதிவு செய்யப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி, இவ்வாறு அதிகளவில் வரி உயர்வு மேற்கொள்ளப்படுவது ஆட்சேபனைக்குரியது என்றும், இந்த முயற்சியை காயல்பட்டினம் நகராட்சி கைவிடவேண்டும் என்றும் நகராட்சி ஆணையரிடம், நடப்பது என்ன? குழுமம் - ஆட்சேபனை பதிவு செய்தது.
நூற்றுக்கணக்கான பொது மக்களும், வழங்கப்பட்ட ஒரு மாத அவகாசத்தில் - தங்கள் ஆட்சேபனையை - நகராட்சியிடம் பதிவுசெய்திருந்தனர்.
இதற்கிடையே - நகராட்சி தரப்பில் இருந்து, இந்த ஆட்சேபனைகள் குறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, வரி விகிதம் குறைக்கப்பட்டதா என்ற எந்த அறிவிப்பும் இல்லாத சூழலில், சொத்துவரி சுயமதிப்பீட்டு படிவங்கள், நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக - நடப்பது என்ன? குழுமம் - கீழ்க்காணும் இரு அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்குகிறது.
(1) தற்போதைய வீட்டின் பரப்பளவும், விண்ணப்பத்தில் நிரப்பப்படும் பரப்பளவும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்; இல்லை என்றால் - மாறுபடும் பரப்பளவிற்கு கூடுதல் வரி - செலுத்தும் சூழல் உருவாகும்
(2) சொத்துவரி அதிகரிப்பு குறித்த பொதுமக்களின் ஆட்சேபனை சம்பந்தமாக - அதிகாரப்பூர்வ விளக்கம், நகராட்சி தரப்பில் இருந்து வரும் வரை, நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகராட்சியில் சமர்ப்பிக்கவேண்டாம்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 17, 2018; 9:30 pm]
[#NEPR/2018101702]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|