மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கு – மன்ற உறுப்பினர்களின் பொருளாதாரப் பங்களிப்புகள் போக, அவர்களைச் சார்ந்த மகளிரும், சிறாரும் பங்களிப்புகளை வழங்கிட சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக – சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்த செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 68-வது செயற்குழு கூட்டம் கடந்த 12.10.2018 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் மலஸில் அமைந்துள்ள அல்-மாஸ் உணவகத்தின் பார்ட்டி ஹாலில் சகோதரர் நுஸ்கி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் ஸைஃபுல்லாஹ் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்தைத் தலைமையேற்று நடாத்திதந்த சகோதரர் நுஸ்கி அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மன்ற செயல்பாடுகள் மிகவும் ஆரோக்கியமான முறையில் செயல்படுவதாகவும், தொடர்ந்து நமது மன்ற செயல்பாடுகள் சீரிய முறையில் நடைபெற மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருமாறு தமது தலைமை உரையில் வேண்டிக்கொண்டார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சத்தை பொருளாளர் சகோதரர் M.M.S. ஷேக் அப்துல் காதர் சூஃபி அவர்கள் வாசித்தார்.
57-வது பொதுக்குழு கூட்டம்:
மன்றத்தின் 57-வது பொதுக்குழு கூட்டத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 16ம் தேதி நடத்தச் செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டுகளைப் போல இஸ்திராஹாவில் குளிர்கால கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியாக நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. பொதுக்குழு ஏற்பாடுகள் சம்பந்தமான ஒருங்கிணைப்பு பணிகளுக்கு ஒரு பிரத்யேக குழு நியமிக்கப்பட்டது. பொதுக்குழு சம்பந்தமான மேலும் விபரங்கள் விரைவில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் வாட்சப் மூலம் தெரிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
பெண்கள் மற்றும் சிறார்கள் நிதி (Women And Kids Fund – WAKF):
பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த Women And Kids Fund – WAKF திட்டம். இத்தட்டத்தின் மூலம் மன்றத்தின் 55வது பொதுக்குழுவில் பெறப்பட்ட நிதியில் இருந்து மக்கள் மருந்தகத்திற்கு ரூபாய் 25,000/- நிதியுதவி வழங்கப்பட்டது. WAKF திட்டத்தினை மேம்படுத்துவது குறித்த விளக்க உரையை சகோதரர் A.H. நூஹு அவர்கள் விபரமாக எடுத்தரைத்தார்கள். அடுத்த மாதம் நடைபெறும் பொதுக்குழு கூடத்தில் பெறப்படும் WAKF நிதியைப் பிரத்தியேக செயல்திட்டங்களில் பயன்படுத்திட செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனைகளைப் பெறப்பட்டு தீர்மானிக்கப்படும். எனவே மன்றத்தின் மூலம் வழங்கப்பட்ட உண்டியலின் நிதியை எதிர்வரும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:
எமது மன்றத்தின் மற்றுமொரு சிறப்பு திட்டமான, ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது அல்ஹம்துலில்லாஹ், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட கடந்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து 16 குடும்பங்களுக்கு இந்த மாதம் (அக்டோபர்-2018) முதல் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டிற்கான இத்திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு இறுதிவரை (டிசம்பர்-2019) உணவுப் பொருட்கள் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
பார்வையாளர்கள் கருத்து:
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோதரர் இக்பால் மற்றும் சகோதரர் A.H. கலீல், தங்களை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தங்களது கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக எமது ரியாத் காயல் நல மன்றம் மற்ற நலமான்றங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாகச் சுட்டி காட்டினார்கள். நகரில் உள்ள மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வழங்குவது மற்றும் நகரின் அனைத்துப் பகுதியிலும் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற செயல்களின் மூலம் உலக காயல் நல மன்றங்கள் மருத்துவத்திற்காக செலவிடும் தொகையினை குறைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாகச் சுட்டி காட்டினார்கள்.
சகோதரர் வாவு கிதுர் முஹம்மது, சகோதரர் VMT அப்துல்லாஹ், சகோதரர் அபூபக்கர் ஆதில், சகோதரர் யாசிர் தாஜுதீன் மற்றும் சகோதரர் செய்யது ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்தும், மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.
இறுதியாகச் சகோதரர் நயீமுல்லாஹ் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில, துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
ஊடகக் குழு, RKWA.
|