காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை ஆட்சேபித்த பொதுநல அமைப்புகளைச் சந்திக்க நகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி மூலம் விதிக்கப்படும் சொத்து வரியை - குறைந்தது 200 சதவீதம் அளவிற்கு உயர்த்திட, காயல்பட்டினம் நகராட்சி சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
செப்டம்பர் 4 அன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்படி (தீர்மானம் # 1671) - ZONE A, ZONE B, ZONE C என மூன்று மண்டலங்களாக காயல்பட்டினம் நகராட்சி தெருக்கள் பிரிக்கப்பட்டு - சதுர அடிக்கு 50 பைசா (A), 25 பைசா (B), 19 பைசா (C) என A, B, C மண்டலங்களுக்கு தற்போது இருக்கும் சொத்து வரி அடிப்படை மதிப்பை, 150 பைசா (A), 80 பைசா (B) மற்றும் 60 பைசா (C) என அதிகரிக்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு பொது மக்கள் - 30 தினங்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் - இந்த வரி உயர்வு, ஏப்ரல் 1, 2018 தேதியினை அடிப்படையாக கொண்டு அமலுக்கு வரும். இதன் மூலம் - 200 சதவீதம் வரி உயர்வு ஏற்படும்.
இந்த வரி உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என நினைக்கும் பொது மக்கள், தங்கள் எதிர்ப்பை - பதிவு தபால் மூலமோ, நேரடியாகவோ காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கும்படி நடப்பது என்ன? குழுமம் - உடனடியாக பொதுமக்களை கேட்டுக்கொண்டது.
மேலும் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு அனுப்ப தோதுவாக மாதிரி ஆட்சேபனை கடிதம் - சமூக ஊடகங்கள் வாயிலாகவும், ஜும்மா பள்ளிகளிலும், நேரடியாகவும் - பொதுமக்களுக்கு, மெகா | நடப்பது என்ன? குழுமம் மூலம் வழங்கப்பட்டது.
இது தவிர - சொத்துவரி அதிகரிப்பு முயற்சியை கைவிடக்கோரி, நகரின் ஜமாஅத்துகள், புறநகர் / ஊர் நல கமிட்டிகள், வழிபாட்டுத்தல நிர்வாகிகள் கையெழுத்திட்ட மனு, ஆணையர் திரு பிரேம் ஆனந்த் அவர்களிடம் மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகளால் - செப்டம்பர் 30 அன்று - சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே - நகராட்சி தரப்பில் இருந்து, இந்த ஆட்சேபனைகள் குறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, வரி விகிதம் குறைக்கப்பட்டதா என்ற எந்த அறிவிப்பும் இல்லாத சூழலில், சொத்துவரி சுயமதிப்பீட்டு படிவங்கள், நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வந்தது. எனவே - சொத்துவரி அதிகரிப்பு குறித்த பொதுமக்களின் ஆட்சேபனை சம்பந்தமாக - அதிகாரப்பூர்வ விளக்கம், நகராட்சி தரப்பில் இருந்து வரும் வரை, நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகராட்சியில் சமர்ப்பிக்கவேண்டாம் என்றும் பொதுமக்களை - மெகா | நடப்பது என்ன? குழுமம் கேட்டுக்கொண்டது.
மேலும் - பொதுமக்களின் ஆட்சேபனையை கருத்தில் கொண்டு - வரியினை குறைக்கவில்லை என்றால் - எந்த வரியையும் பொது மக்கள் செலுத்தமாட்டார்கள் என நகராட்சிக்கு தெரிவிக்கும் சுவரொட்டிகள் - நகர் முழுவதும், மெகா | நடப்பது என்ன? குழுமம் ஏற்பாட்டில் ஒட்டப்பட்டது.
காயல்பட்டினத்தை விட - குறைவாக வரி உயர்த்தியுள்ள ஆறு நகராட்சிகள் விபரங்களும், கடந்த வாரம் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, நடப்பது என்ன? குழுமம் மூலம் வழங்கப்பட்டது.
பொது மக்கள், அமைப்புகளில் இருந்து சுமார் 250 ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆட்சேபனை தெரிவித்துள்ளவர்களை சந்தித்து, கருத்துக்கள் பெற - காயல்பட்டினம் நகராட்சி - எதிர்வரும் வெள்ளியன்று (டிசம்பர் 14) காலை 10 மணிக்கு கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, தற்போது ஒவ்வொருவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
எனவே - தங்கள் ஆட்சேபனையை பதிவு செய்தவர்கள், தவறாது அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு - அதிகரிக்கப்பட்டுள்ள வரியினை குறைக்க வலியுறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 12, 2018; 6:30 pm]
[#NEPR/2018121201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|