காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனையில், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா சார்பில் இரத்தம் உறையாமை (ஈமோஃபீலியா) நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
ஈமோஃபீலியா (Haemophilia / Hemophilia) என்பது மனித உடலில் குருதி உறையாமல் போகும் நோயின் பெயராகும்.
இரத்தத்தை உறையச் செய்யும் காரணிகளின் (CLOTTING FACTORS) செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது. FACTOR VIII என்ற காரணி குறைவாக இருப்பதன் காரணமாக ஈமோஃபீலியா - A வகை நோய் ஏற்படும்; FACTOR IX என்ற காரணி குறைவாக இருப்பதன் காரணமாக ஈமோஃபீலியா - B வகை நோய் ஏற்படும்.
இந்த நோய் - பெரும்பாலும் ஆண்களிடமே காணப்படும். 7500 ஆண்களில் ஒரு ஆணுக்கு - ஈமோஃபீலியா - A நோய் உண்டு எனவும், 40,000 ஆண்களில் ஒரு ஆணுக்கு - ஈமோஃபீலியா - B நோய் உண்டு எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய்க்கு நிரந்தர மருத்துவம் எதுவும் இல்லை. காயங்கள் ஏற்பட்டு குருதி கசிவு நிற்கவில்லை என்றால், நோயின் வகைக்கு ஏற்ப - FACTOR VIII அல்லது FACTOR IX, ஊசி மூலம் உடலில் ஏற்றப்படும்.
காயல்பட்டினத்தில் இந்த அரிய நோய் - ஒரு சிலரிடம் காணப்படுகிறது. இந்த நோயினை எவ்வாறு பெற்றோர்களும், சமுதாயமும் எதிர்க்கொள்ளலாம் என அறிந்திட, ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி - இன்று மாலை - KMT மருத்துவமனை வளாகத்தில், மாலை 5:00 மணி அளவில் நடைபெற்றது.
இந்த துறையின் மூத்த வல்லுனரான திருநெல்வேலி பீஸ் ஹெல்த் சென்டர் உடைய தலைவர் டாக்டர் R.அன்புராஜன் B.Sc., MBBS, DMLS, FHM, DFM, FCGP - சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு, உரை நிகழ்த்தினார்.
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) உடைய முயற்சியில் ஈமோஃபீலியா ஆதரவு குழுமம் (HAEMOPHILIA SUPPORT GROUP) என்ற பெயரில் இயங்கவுள்ள ஒரு சிறப்பு பிரிவு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு - மெகா அமைப்பின் தலைவர் ஹாஜி S.A.முஹைதீன் அவர்கள், KMT அறக்கட்டளை யின் முன்னாள் தலைவர் ஃபாஸீ ஹாஜி அவர்கள், செயலாளர் ஹாஜி A.K.செய்யது அவர்கள், மருத்துவர்கள் டாக்டர் செய்யது அஹமது, டாக்டர் இத்ரீஸ், டாக்டர் ஜாபர் சாதிக், டாக்டர் பாவநாசகுமார், டாக்டர் கிஸார் - ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மெகா அமைப்பின் துணை செயலர் ஹாபிழ் முஜாஹித் அலி - நிகழ்ச்சியினை நெறிப்படுத்தி, அறிமுக உரை வழங்கினார்.
அதில் - ஈமோஃபீலியா, Muscular Dystrophy, Autism போன்ற பல அரிய நோய்கள் நகரில் காணப்படுவதாகவும், அது போன்ற நோய்களுக்கு - குறைந்தது தாலுகா அளவில் ஆதரவு குழுக்களை அமைத்து - இறைவன் நாடினால் - செயல்படுவது என மெகா அமைப்பு திடட்மிட்டுள்ளது என்றும், இதன் முதற்கட்டமாக இந்த நிகழ்வு என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து - நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் டாக்டர் அன்புராஜன் அவர்கள் விரிவான உரையினை வழங்கினார்கள். அதில் - இந்த நோயின் தன்மை குறித்தும், எவ்வாறு ஏற்படுகிறது, அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், பெற்றோர்களின் பங்கு, சமூகத்தின் பங்கு என்ன என தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
மூன்று தென் மாவட்டங்களில் சுமார் 2500 பேர் ஈமோஃபீலியாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 300 க்கும் குறைவானவர்களே அதற்கான சொசைட்டியில் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்மாவட்டங்களுக்கு என திருநெல்வேலியை மையமாக வைத்து செயல்புரியும் இதற்கான சொசைட்டியின் முதல் தலைவர் காயல்பட்டினம் சார்ந்த மறைந்த மருத்துவர் டாக்டர் தம்பி என நினைவுக்கூர்ந்த - டாக்டர் அன்புராஜன் அவர்கள், ஈமோஃபீலியா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை - டாக்டர் தம்பி அவர்கள் காயல்பட்டினத்தில் நடத்திட விரும்பியதாக தெரிவித்தார்.
மேலும் - காயல்பட்டினம் சார்ந்த இதய நோய் நிபுணர் டாக்டர் மெஹபூப் சுபுஹானி அவர்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை - காயல்பட்டினத்தில் நடத்திட விருப்பம் தெரிவித்ததாகவும், மெகா அமைப்பு - அவர்கள் அனைவரின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் டாக்டர் அன்புராஜன் தெரிவித்தார்.
நகரில் ஈமோஃபீலியாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் அவசர தேவைக்கு, அதற்கான மருந்தினை தனது மருத்துவமனை - KMT மருத்துவமனையில் கொடுத்து வைக்கும் என உறுதியளித்த டாக்டர் அன்புராஜன் அவர்கள், இரண்டு - மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடத்திடவும், அதில் தானும் பங்கேற்பதாகவும், இந்த நோயினை கண்டறிய முகாமிற்கு ஏற்பாடு செய்திடவும் - தனது உரையில் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் கிஸார் அவர்கள் - KMT மருத்துவமனையில் சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள், சிகிச்சை / பரிசோதனை முறைகள், பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் வருகை ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் நகர மருத்துவர்கள் டாக்டர் உனைஸ், டாக்டர் இர்ஷாத், KMTஅறங்காவலர்கள், உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் திரளாக கலந்துக் கொண்டார்கள்.
பெண்களுக்கும் தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இறுதியாக ஹாபிழ் முஜாஹித் அலி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|