அரசு பெயரைச் சொல்லியோ, தனியார் பெயரைச் சொல்லியோ ஆய்வு / தகவல் சேகரிப்பு என வரும் எவரிடமும் எந்தத் தகவலையும் பொதுமக்கள் வழங்க வேண்டாம் என மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா எச்சரித்துள்ளது. அதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
நேற்று (பிப்ரவரி 8) - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - நிர்வாகிகளின் கவனத்திற்கு - இரு வேறு மூலங்கள் வாயிலாக, நகரில் - ஒரு சிலர் கணக்கெடுப்பு எடுப்பதாகவும், அதில் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த கேள்விகள் கேட்கப்படுவதாகவும் - தகவல் கொண்டு வரப்பட்டது.
இந்த ஆய்வில் கேட்கப்படும் கேள்விகளின் நகலினை - சமூக ஆர்வலர் ஒருவர் மூலமாக - தற்போது மெகா அமைப்பின் நிர்வாகிகள் பெற்றுள்ளார்கள். அந்த கேள்விகள் அதிர்ச்சியளிக்கின்றன.
8 பக்கங்கள், 39 கேள்விகள் கொண்ட அந்த படிவம், கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்கு என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த படிவத்தில் - தலைப்பில் இருந்து கேள்விகள் வரை பல்வேறு (எழுத்துப்)பிழைகள் உள்ளன. அது பிரச்சனை அல்ல.
ஆனால் - அதில், ஒருவரின் தனியுரிமை / அந்தரங்கம் (PRIVACY) பாதிக்கப்படக்கூடிய கேள்விகள் பல உள்ளன.
ஆய்வில் பங்கு கொள்பவரின் பெயர், அவரின் குடும்பத்தினர் பெயர், பாலினம், வயது, வருவாய், எதற்காக வெளிநாடு / வெளியூர் சென்றார், அதற்கு முன்பு அவரின் வருவாய்/பிறகான வருவாய், எந்தெந்த வகைக்கு செலவு செய்கிறார்கள் (புலம்பெயர்வதற்கு முன்பு / பின்பு), பணத்தை எங்கு சேர்த்து வைக்கிறார்கள், புலம்பெயர்ந்ததால் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சந்தோசமாக இருக்கிறார்களா என பல்வேறு தனிநபர் உரிமையை பாதிக்கும், அந்தரங்க விஷயங்களும் அந்த படிவத்தில் கேள்விகளாக காணமுடிந்தது.
இந்த படிவத்தை கொண்டு வந்தவர்கள் யார், எந்த கல்லூரியை சார்ந்தவர்கள் என்ற விபரம் இல்லை.
பொது மக்களின் கனிவான கவனத்திற்கு!
இது போன்ற ஆய்வுகள் செய்ய வருபவர்களிடம் எந்த தகவலும் வழங்கவேண்டாம்.
இந்த ஆய்வு மட்டுமல்ல, ஆய்வு என்ற பெயரில் இனி எவர் வந்தாலும் - எந்த தகவலும் வழங்காதீர்கள்!
உங்களை பற்றிய விபரங்கள், உங்கள் குடும்பத்தை பற்றிய விபரங்கள் - உங்கள் சொத்து!
அதனை நீங்கள் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை!
அரசின் / அரசு துறையின் பெயரை சொல்லி வந்தால் என்ன செய்வது என்ற கேள்வி வரலாம்!
அதற்கும் - இதே பதில் / நிலைப்பாடு வழங்குங்கள் / எடுங்கள்.
அரசு / அரசு துறை பெயரை சொல்லி வருபவர்களின் விஷயத்தில் இரு அம்சங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(1) தாங்கள் அரசு / அரசுத்துறை / நகராட்சி போன்றவற்றை சார்ந்தவர்கள் என அவர்கள் தெரிவிக்கலாம்; அதற்கான கடிதம் / அடையாள அட்டையும் வைத்திருக்கலாம்.
அவைகளை எவ்வாறு நம்புவது? போலியாக அடையாள அட்டை/ கடிதம் தயாரிக்க - தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரிய கஷ்டம் கிடையாது.
(2) அப்படியே ஆய்வு செய்ய / தகவல் சேகரிக்க வந்துள்ள நபர், அரசு / துறை சார்ந்தவராக ஊர்ஜிதமாக இருந்தாலும், ஒரு ஆய்வில் பங்கேற்பதும், பங்கேற்காமல் இருப்பதும் - ஒவ்வொரு தனி நபரின் விருப்பம், உரிமை.
எனவே - அரசு / துறை பெயரை சொல்லி எவர் வந்தாலும், அந்த ஆய்வில் பங்கேற்று, உங்கள் சொந்த, அந்தரங்க, தனிப்பட்ட விபரங்களை நீங்கள் பகிரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பொது மக்கள் - இந்த மன நிலையை - முதலில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
யார் வந்து கேட்டாலும், தங்கள் பெயர், முகவரி, அலைபேசி எண், ஆதார் எண் போன்ற தகவல்களை உடனடியாக, எளிதாக கொடுக்காதீர்கள். அதன் விளைவுகள் எல்லா சமயங்களிலும் நன்மையாக இருக்காது.
அது பள்ளிக்கூடங்களாக இருக்கட்டும், வங்கிகளாக இருக்கட்டும் - எந்த தகவல் அவசியமோ, அதை தாண்டி - எந்த விபரத்தையும் சேகரிக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது.
தற்போது கேள்வி ஒன்று எழலாம்.
அப்படி என்றால், 100 சதவீதம், எல்லா தருணங்களிலும், எல்லோரிடமும் - நாம் தகவல் தர மறுக்கலாமா?
அப்படி கிடையாது.
யாரிடம் கொடுக்கவேண்டும், எதற்கு கொடுக்கவேண்டும், சட்டப்படி அவர்களுக்கு அதை கேட்க உரிமையுள்ளதா என ஆய்வு செய்து, அறிந்து - பின்னர் தான் - கொடுக்கலாமா, வேண்டாமா என நாம் முடிவெடுக்கவேண்டும்.
தான் இயற்றிய சட்டப்படி - அரசே - சில தகவல்களை கேட்டாலும், அதை கொடுக்க மறுத்து, அது குறித்து நீதிமன்றங்களை நாடும் உரிமை நமக்கு உள்ளது.
எனவே - எந்த தகவலையும், எவரிடமும் நான் வழங்க மாட்டேன் என்ற மன நிலையை, பழக்கத்தை முதலில் அனைவரும் வளர்க்கவேண்டும்; அது பெயர், அலைபேசி எண் போன்ற சின்ன தகவல்களாகஇருக்கட்டும்; ஆதார் எண், பாஸ்போர்ட் எண், ரேஷன் அட்டை எண் போன்ற பெரிய தகவல்களாக இருக்கட்டும். எந்த தகவலையும் வழங்கமாட்டேன் என்ற முடிவை முதலில் எடுங்கள்.
அதன்பிறகு - எந்தெந்த விஷயங்களில் நாம் தகவலகள் வழங்கலாம் என்ற முடிவை, ஒவ்வொரு விஷயமும் எழும்போது (CASE-BY-CASE) - அலசி ஆராய்ந்து, எடுக்க பழகிக்கொள்வோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|