காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு துவங்கிட காலதாமதம் ஏன் என்றும், அவ்வகைக்காக சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கியதாகக் கூறப்பட்ட நிதி என்ன ஆனது என்றும் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் சிறுநீரகம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளோர், நகரில் இருந்து வெகுதூரம் சென்று DIALYSIS போன்ற சிகிச்சைகளை பெறவேண்டியுள்ளதை கருத்தில்கொண்டு - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - 2017 ஆம் ஆண்டு முதல் இதற்கான கோரிக்கையை பல்வேறு மட்டங்களில் வைத்து வருகிறது.
நவம்பர் 29, 2017 அன்று - இது குறித்த கோரிக்கையை - அப்போதைய தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜெயசிங் நட்டர்ஜீ அவர்களிடம், மெகா அமைப்பு, வைத்தது.
சவுதிஅரேபியா ஜித்தாஹ் நகரத்திற்கு வருகை புரிந்திருந்த ராஜ்ய சபா உறுப்பினர் திரு திருச்சி சிவா அவர்களிடம், மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக இந்த கோரிக்கை பிப்ரவரி 3, 2018 அன்று வைக்கப்பட்டது.
செப்டம்பர் 12, 2018 இல் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் முக்கிய தேவைகள் என DIALYSIS பிரிவு உட்பட 11 விஷயங்கள் பட்டியலிடப்பட்டு - திருச்செந்தூர் தொகுதி சட்டமன்றம் உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இதன் பிறகும் - இக்கோரிக்கை குறித்து எவ்வித முன்னேற்றம் இல்லாததை அடுத்து - சென்னையில், ஜூலை 9, 2019 அன்று - மாநில சுகாதார சங்கத்தின் (STATE HEALTH SOCIETY) அப்போதைய திட்ட இயக்குனர் (MISSION DIRECTOR) டாக்டர் தரேஸ் அஹமத் IAS அவர்களை சந்தித்து - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு DIALYSIS கருவிகள் தேவைக்குறித்து எடுத்துரைக்கப்பட்டது. டாக்டர் தரேஸ் அஹ்மத் இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
மேலும் - அத்துறை அதிகாரிகள் - இரு கருவிகள் வரை தரலாம் என்றும், இந்த கருவிகளை இயக்க தண்ணீர் சுத்தீகரிப்பு (Reverse Osmosis Plant) ஏற்பாடுகள் அவசியம் என்றும், அந்த ஏற்பாடுகள் செய்தபின் தகவல் கிடைக்கப்பெற்ற இரு வாரங்களுக்குள் - அந்த கருவிகள் காயல்பட்டினம் வந்தடையும் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே - சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் (MLACDS) இருந்து, DIALYSIS பிரிவினை உருவாக்க நிதி தருவதாக கூறியுள்ளார் என செய்தி வந்தது. அதனை கருத்தில் கொண்டு - மெகா அமைப்பு தனது முயற்சியினை கிடப்பில் சிறிது காலம் வைத்தது.
இடைப்பட்ட காலத்தில் இது குறித்து சுகாதாரத்துறை வட்டாரத்தில் விசாரித்ததில் - சட்டமன்ற உறுப்பினர் நிதி வழங்கும் விஷயத்தில் முன்னேற்றம் இல்லை என தகவல் வந்தது. இந்த கட்டத்தில் - கத்தர் காயல் நற்பணி மன்றம் - அரசு மருத்துவமனையில் RO கருவிகள் நிறுவிட முன்வந்தது.
மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகிகளும், கத்தர் காயல் நற்பணி மன்றத்தின் மூத்த நிர்வாகிகளும், ஆகஸ்ட் 2019 முதல் வாரம் - தூத்துக்குடியில், மாவட்ட சுகாதாரத்துறையின் அப்போதைய இணை இயக்குனர் டாக்டர் பரீதா ஸீரீன் அவர்களை நேரில் சந்தித்து - ஏற்கனவே மாநில சுகாதார சங்கம், இரு DIALYSIS கருவிகளை தர முன்வந்துள்ளதை தெரிவித்தும், அதற்கு தேவையான RO கருவிகளை கத்தர் காயல் நற்பணி மன்றம் தர முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதில் வழங்கிய இணை இயக்குனர் - திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு அனிதா - RO கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்வதாக மீண்டும் உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கவே - மெகா அமைப்பு, அந்த முயற்சியை தற்காலிகமாக கைவிட்டது. இருப்பினும் - அதன் பிறகும், இவ்விஷயத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இதற்கிடையே - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - 2019 - 2020 காலகட்டத்தில், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் - தனது தொகுதி நிதியில் இருந்து பரிந்துரைந்துள்ள பணிகள் விபரங்கள், மெகா அமைப்பு சார்பாக கோரப்பட்டது.
அதற்கு பெறப்பட்ட பதிலில் - அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் - DIALYSIS பிரிவுக்கு தருவதாக கூறியிருந்த திட்டம் இல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
இந்த தருணத்தில் - இந்த பணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் போதாது, இன்னும் 10 லட்சம் ரூபாய் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்; அந்த நிதியையும் சட்டமன்ற உறுப்பினர் தருவார் என்ற செய்தி - சமூக ஊடகங்கள் மூலம் - நவம்பர் 2019 முதல் வாரம் - பரவியது.
ஆனால் - பிப்ரவரி 2020 முதல் வாரம் வரை, இந்த பணிக்கான ஒப்புதல் - சட்டமன்ற உறுப்பினர் நிதியினை கையாளும் துறையினால் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இது குறித்து விசாரித்ததில், கீழ்காணும் தகவல்கள் அறியமுடிந்தது.
சட்டமன்ற உறுப்பினர் - ஜூலை 2019 மாதம் துவக்கத்தில் வழங்கிய பரிந்துரையில் - DIALYSIS கருவி பிரிவு அறைக்கு தேவையான AC போன்ற விஷயங்களை சேர்த்திருந்ததால், அது போன்ற பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் செய்யமுடியாது என்பதால் - அந்த பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
அதன் பிறகு - சில மாதங்கள் கழித்து, நவம்பர் 2019 இல். RO கருவிகள் போக, DIALYSIS கருவிகளையும் சேர்த்து - 20 லட்சம் ரூபாய்க்கு மீண்டும் ஒரு பரிந்துரையினை, சட்டமன்ற உறுப்பினர் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் - இந்த பரிந்துரைக்கு, இதுவரை மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் - DIALYSIS கருவிகளை தமிழக அரசின் மாநில சுகாதார சங்கம் (SHS) இலவசமாக வழங்கிட ஒப்புதல் கொடுத்த பிறகும், சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையில் அவை இடம்பெற்றுள்ளன.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பழைய சோதனைக்கூடத்தில் (LABORATORY) - DIALYSIS கருவிகளை நிறுவிட திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர் நிதியில் புனரமைப்பு பணிகளை செய்யமுடியாது என தெரிவிக்கப்பட்ட பிறகு, அந்த கட்டிடத்தை புனரமைக்கும் பொறுப்பினை காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் - RO கருவி மட்டும் - சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் நிறுவப்பட்டிருந்தால், அரசின் உதவியுடன் - DIALYSIS பிரிவு எப்போதோ காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டிருக்கும்; அல்லது - கத்தர் காயல் நற்பணி மன்றம் முன்வந்த காலகட்டத்தில் RO கருவி நிறுவ அனுமதிக்கப்பட்டிருந்தால், DIALYSIS பிரிவு எப்போதோ துவங்கப்பட்டிருக்கும்.
ஆனால் - இன்று வரை, இவ்விஷயங்களில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்னன் அவர்களின் ஒதுக்கீடு பெறப்படாததால் - இப்பணிகள் துவங்கப்படாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|