வங்கிக் கணக்கில் தற்காலத்தில் பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பற்றது என்றும், அதை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டு வந்த குரல் பதிவு தொடர்பாக - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
நடப்பது என்ன? குழுமம் உட்பட பல்வேறு சமூக ஊடக குழுமங்களில், தற்போது - 3 நிமிடம், 44 வினாடி நீளம் கொண்ட - குரல் பதிவு ஒன்று உலா வருகிறது.
அந்த குரல் பதிவில் பேசுபவர் யார் என்று தன்னை குறிப்பிடாவிட்டாலும், அந்த குரல் பதிவை சமூக ஊடகங்களில் பகிர்பவர்கள், காயல்பட்டினம் சார்ந்த ஒரு நகைக்கடை உரிமையாளரின் குரலாக குறிப்பிட்டு, அதனை பகிர்கிறார்கள்.
அவசியம் இல்லை என்ற காரணத்திற்காக - அந்த குரல் பதிவுக்கு சொந்தக்காரர் பெயரை நாம் இங்கு குறிப்பிடவில்லை; அந்த குரல் பதிவை மீண்டும் நாம் பகிரவில்லை.
அந்த குரல்பதிவை சுட்டிக்காட்டி, அதன் உண்மைத்தன்மை குறித்து பலர் நம்மிடம் - சமூக ஊடக குழுமங்களிலும், தனிப்பட்ட முறையிலும் கேட்பதால் - இந்த விளக்கம் வழங்கப்படுகிறது.
அந்த குரல்பதிவில் தெரிவிக்கப்படும் விபரங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
(1) வங்கிகளில் - பணத்தை முதலீடு (Savings, FD, RD etc) செய்வது எந்த அளவு பாதுகாப்பானது என்பது குறித்து தனது கருத்து என துவங்கும் அந்த குரல் பதிவு, பிப்ரவரி மாதம் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இரு சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தொடர்கிறது.
அந்த குரல்பதிவில் - இரு சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என சொல்லிவிட்டு, ஒரு சட்டத்தின் பெயர் (FSDR) குறிப்பிடப்படுகிறது.
விளக்கம்:
ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும், மார்ச் 2 முதல் ஏப்ரல் 3 வரை இரண்டாம் கட்டமாகவும் - பாராளுமன்றம் கூட உள்ளததாக - அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் என்னென்ன சட்டங்கள் நிறைவேற்றப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
(2) 2017 இல் FRDI (THE FINANCIAL RESOLUTION AND DEPOSIT INSURANCE BILL, 2017) என்ற சட்டத்தை அரசு கொண்டுவர முயற்சி செய்தது, முடியவில்லை; தற்போது FSDR என்ற பெயரில் அந்த சட்டத்தினை கொண்டு வர உள்ளது என குரல் பதிவு தெரிவிக்கிறது.
விளக்கம்:
இது உண்மையே.
இந்த குரல் பதிவு சொல்வது போல், ஆகஸ்ட் 2017 இல் FRDI என்ற சட்டத்தினை - பாராளுமன்றத்தில், அரசு அறிமுகம் செய்தது. பிறகு - விவாதத்திற்காக சிறப்பு குழுவிற்கு (SELECT COMMITTEE) - அந்த சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. ஓர் ஆண்டிற்கு பிறகு, பல தரப்புகளில் இருந்து - அதில் இடம்பெற்றிருந்த சில அம்சங்கள் குறித்து எதிர்ப்பு வந்த காரணத்திற்காக - ஆகஸ்ட் 2018 இல், ஆலோசனை நிலையிலேயே வாபஸ் பெறப்பட்டது.
அதே சட்டம் - FSDR என்ற பெயரில் மீண்டும் வருகிறது என அதிகாரப்பூர்வமாக அரசு தெரிவிக்காவிட்டாலும், நாட்டின் முக்கிய ஊடகங்கள், பொருளாதார நிபுணர்கள் - Financial Sector Development and Regulation (Resolution) Bill, 2019 (FSDR) என்ற பெயரில், வரைவு சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
(3) FSDR சட்டத்தின் மூலமாக, நாடு பொருளாதார சிக்கலில் உள்ளது என ஒரு அறிவிப்பு (NOTIFICATION) வெளியிட்டு, எந்த நேரத்திலேயும், வங்கியில் உள்ள சேமிப்பு (SAVINGS), நிலையான வைப்பு (FIXED DEPOSIT), பரஸ்பர நிதி (MUTUAL FUND) போன்ற பணத்தை எடுத்துக்கொள்கிறோம் என அறிவித்து மத்திய அரசு எடுத்துக்கொள்ளலாம் என அந்த குரல் பதிவு தெரிவிக்கிறது.
விளக்கம்:
இது தவறான தகவல் ஆகும்.
FSDR சட்டத்தின் நகல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளி வரவில்லை. அதில் என்ன உள்ளது என அறிந்து செய்தி வெளியிட்டுள்ள நிபுணர்களும், அந்த சட்டத்தின் நோக்கமாக இதனை தெரிவிக்கவில்லை.
அப்போது FSDR எது குறித்தது?
இதற்கான பதில் - குரல் பதிவு செய்தவர் சொன்ன, ஏற்கனவே வெளிவந்த FRDI வரைவு சட்டத்தின் முதல் பத்தியிலேயே உள்ளது.
BILL to provide for the resolution of certain categories of financial service providers in distress; the deposit insurance to consumers of certain categories of financial services; designation of systemically important financial institutions; and establishment of a Resolution Corporation for protection of consumers of specified service providers and of public funds for ensuring the stability and resilience of the financial system and for matters connected therewith or incidental thereto.
அதாவது - நாட்டில் - வங்கிகள் (Banks), காப்பீடு நிறுவனங்கள் (Insurance Companies) போன்ற பல்வேறு வகையான நிதி நிறுவனங்கள் (Financial Service Providers) உள்ளன. அந்த நிறுவனங்களில் ஒன்று - பொருளாதார நெருக்கடியை (DISTRESS) சந்திக்க நேர்ந்தால், எவ்வாறு அதனை கையாளுவது என்பதே அதன் நோக்கம்.
அந்த குரல் பதிவு தெரிவிப்பது போல், நாடு கடுமையான பொருளாதார நிலையை அடைந்து, ஒரு வாதத்திற்கு அரசுக்கு பணம் தேவையென்றால் - வங்கிகளில் உள்ள முதலீடுகளில் மட்டும் ஏன் கை. வைக்கவேண்டும்? அந்த நிலையில் - நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும், நகை கடைகளிலும் உள்ள தங்கங்களிலும் கூட அரசு கை வைக்கலாம்?!
எனவே - FSDR என கூறப்படும் சட்டத்தின் நோக்கம் - குரல் பதிவு தெரிவிப்பது போன்று அல்ல.
(4) இந்த குரல் பதிவு முடியும் போது, வங்கியில் உள்ள பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என தெரிவித்து முடிக்கிறது.
விளக்கம்:
வங்கிகளை விட, தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா என விளக்குவதற்கான பதிவு இதுவல்ல. இந்த பதிவின் நோக்கம் - FSDR என்ற சட்டம் குறித்து அந்த குரல் பதிவில் பரப்பப்படும் தகவல் உண்மையா என்பதே ஆகும்._
முற்றிலும் பாதுகாப்பான முதலீடு என எதுவும் இல்லை என்பதனை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளவும். வங்கியோ, தங்கமோ, இன்னபிற முதலீடுகளோ - அனைத்திலும் மாறுபடும் அளவில் ஆபத்துகள் (VARYING DEGREES OF RISK) உள்ளன.
வங்கியில் பணம் போடுவதோ, தங்கத்தில் போடுவதோ, பங்கு சந்தையில் போடுவதோ, நிலங்களில் போடுவதோ, இன்னபிற வழிகளில் முதலீடு செய்வதோ - ஒவ்வொருவரும், அலசி ஆராய்ந்து, அவசியப்பட்டால் - தேர்ச்சி பெற்ற பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று - எடுக்கவேண்டிய முடிவாகும்.
WHATSAPP மூலம் பரப்பப்படும், உறுதி செய்யப்படாத, முழுமையில்லாத தகவல்கள் அடிப்படையில் எந்த பொருளாதார முடிவையும் பொதுமக்கள் எடுக்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த தகவலின் நோக்கம் - FSDR சட்டத்தில் ஆபத்துகள் இல்லை, ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் இல்லை என தெரிவிப்பதற்காக அல்ல. அந்த சட்டம் குறித்து - பல்வேறு ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் உள்ளன; அதனை - அது குறித்த நிபுணர்கள் விளக்கியுள்ளார்கள்.
அவசியம் எழும்போது - அது குறித்த விளக்கமும், தனியாக - இறைவன் நாடினால் - வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|