காயல்பட்டினம் நகராட்சியின் ஸ்டிக்கர் மோசடி அரங்கேற்றப்பட்டது, அது தடுக்கப்பட்டது எப்படி என்று ஆதார ஆவணங்களுடன் விளக்கி - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த அக்டோபர் மாதம் - ஒவ்வொரு வீடாக சென்று, ஒரு குழுவினர் - வீட்டு எண், சொத்து வரி எண், குடிநீர் எண் போன்ற விபரங்களை குறிப்பிட்டு, 8" x 6" டிஜிட்டல் பிளக்ஸ் - வீட்டு வாசலில் நிறுவ வேண்டும் என்றும், இதற்கான அனுமதியினை நகராட்சி வழங்கியிருக்கிறது என்றும் , இதற்கான கட்டணம் ரூபாய் 50 என்றும் வசூல் செய்து வந்தனர்.
இது போன்ற எந்த திட்டமும் தமிழக அரசு அறிவிக்கவில்லை; இதுபோன்ற அவசியம் இருப்பதாகவும் நகராட்சி தீர்மானமும் நிறைவேற்றவில்லை.
இருப்பினும் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திருமதி புஷ்பலதா - தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி - வழங்கிய ஒரு கடிதத்தின் நகலினை கையில் வைத்துக்கொண்டு - இந்த வசூல் வேட்டை நகர் முழுவதும் அரங்கேறியது.
விபரம் அறியாத பலர் - எவ்வித பிரயோஜனம், அவசியம் இல்லாத இந்த ஸ்டிக்கர் வாங்குவது கட்டாயம் என நினைத்து - வாங்கினர். ஒரு சில இடங்களில் - சில அரசு திட்டங்கள் பெற இது அவசியம் என கூறப்பட்டதாகவும் புகார்கள் வந்தன.
இது குறித்து - காயல்பட்டினம் நகராட்சியில் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக அக்டோபர் 29 அன்று ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இது மக்களை அவசியமின்றி ஏமாற்றும் செயலாகும் என்றும், இதனை உடனடியாக நகராட்சி ரத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அக்டோபர் 30 அன்று இது குறித்த விபரம் - உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் அதன் பிறகும் - காயல்பட்டினம் நகராட்சி, இந்த வசூல் வேட்டையை தடை செய்யவில்லை.
அதன் பிறகு - மெகா அமைப்பு சில விசாரணைகளை மேற்கொண்டது. அந்த விசாரணையில், வசூல் செய்யும் அமைப்பு வழங்கும் ரசீது போலியானது என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை முகவரியில் அவ்வாறு நிறுவனம் இல்லை என்றும் தெரியவந்தது.
இந்த விபரங்கள் - மீண்டும் - தமிழக முதலமைச்சரின் சிறப்பு பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் - நவம்பர் 18 அன்று வழங்கப்பட்டது.
இரண்டு மாதங்கள் கழித்து - மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட புகாருக்கு பதில் வழங்கியுள்ள நகராட்சி - கீழ்க்காணும் விளக்கத்தை வழங்கியுள்ளது.
மேற்படி மனுதாரா் குறிபிட்டுள்ள புகாா் அடிப்படையில் common service center chennai நிறுவனத்திற்கு வழங்காட்டு உத்தரவு 21/ 11/ 2019 முதல் ரத்து செய்யப்பட்டது என்ற விவரம் நக எண் 56/ 2020 ன் படி தொிவிக்கப்படுகிறது. (https://gdp.tn.gov.in/getPetitionStatusQR.php?pet_id=3430755
மேலும் - இது குறித்து விசாரணை செய்ய - நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு அறிவுறுத்தி, முதலமைச்சரின் தனிப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இது குறித்து விபரங்கள் கோரப்பட்டது. அதற்கு பதிலாக பெறப்பட்ட ஆவணங்கள் - சில முக்கிய தகவல்களை வழங்கியுள்ளன.
26-8-2019 அன்று - COMMON SERVICE CENTRE (CSC) என்ற தலைப்பிலான லெட்டர் பேடில் - ஆணையரிடம், ஸ்டிக்கர் விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் உண்மைத்தன்மை, அவ்வாறு அந்த அமைப்புக்கு செயலாற்ற அனுமதி உள்ளதா, அதற்கான அவசியம் உள்ளதா என எதையும் ஆராயாமல், 25-9-2019 அன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் - அந்த வசூல் வேட்டைக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த மோசடி குறித்து புகார்கள் பலமுறை - ஆதாரங்களுடன் நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டு பல வாரங்கள் கழித்து - 27-11-2019 அன்று அந்த அனுமதியை காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ரத்து செய்துள்ளார்.
காயல்பட்டினம் நகராட்சியில் சுமார் 15,000 வீடுகள் உள்ளன. அனுமதிக்கும், ரத்துக்கும் இடையிலான காலகட்டத்தில் எவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்டது என தெரியவில்லை.
அதிகார துஸ்பிரயோகம், மோசடி சம்பந்தமான இந்த வழக்கு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|