ஜம்இய்யத் அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் (JAS) அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் புனிதமிகு ஜியாரத்துகள் புகைப்படக் கண்காட்சி, காயல்பட்டினம் ஜலாலிய்யாஹ் நிகாஹ் மஜ்லிஸில் நேற்றும், இன்றும் (செப்டம்பர் 20,21 தேதிகளில்) நடைபெற்றது.
இக்கண்காட்சி குறித்து அதன் ஒருங்கிணைப்பாளரும், ‘தர்கா‘ மாத இதழின் ஆசிரியருமான மவ்லவீ செய்யித் அஹ்மத் லத்தீஃபீ தெரிவித்ததாவது:-
எமது ‘தர்கா‘ மாத இதழ் நிர்வாகத்தின் ஏற்பாட்டில், ஜம்இய்யத் அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் (JAS) அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் புனிதமிகு ஜியாரத்துகள் புகைப்படக் கண்காட்சி, காயல்பட்டினம் ஜலாலிய்யாஹ் நிகாஹ் மஜ்லிஸில் நேற்றும், இன்றும் (செப்டம்பர் 20,21 தேதிகளில்) நடைபெற்றது.
காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை ஆண்களுக்கும், மதியம் 03.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பெண்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரித்திர ஆவனங்கள், உடமைகளின் புகைப்படங்களும்,
உலகளாவிய அளவில் உள்ள மகான்களின் அடக்கஸ்தலங்கள், அவற்றில் நடைபெறும் உரூஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்களும்,
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிராக இருப்போரை அடையாளங்காட்டும் வாசகங்கள் பதிக்கப்பட்ட பதாதைகளும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை எடுத்துரைக்கும் புத்தகங்களின் விற்பனைக் கூடமும், ‘தர்கா‘ மாத இதழ் விற்பனை மற்றும் சந்தா சேர்ப்புக் கூடமும் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்தது.
காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த சுமார் 400 ஆண்களும், 600 பெண்களும் இக்கண்காட்சியைப் பார்த்துப் பயனடைந்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்:
குளம் ஜமால் முஹம்மத்,
காயல்பட்டினம். |