காயல்பட்டினம் அலியார் தெருவில் செயல்பட்டு வருகிறது கௌது முஹ்யித்தீன் மத்ரஸா. காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சார்ந்த பெரியவர்கள் நிர்வகித்து வரும் இந்த மத்ரஸாவில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு, சின்ன நெசவுத் தெரு, கே.டி.எம்.தெரு, அலியார் தெரு, பரிமார் தெரு ஆகிய தெருக்களைச் சார்ந்த பெண்களும், சிறுவர் - சிறுமியரும் மார்க்க அடிப்படைக் கல்வியைக் கற்று வருகின்றனர். காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியில் கற்றுத் தேர்ந்த ஆலிமாக்கள் இந்த மத்ரஸாவில் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
மத்ரஸாவில் நாளுக்கு நாள் மாணவ-மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கேற்ப, தற்போது மத்ரஸா செயல்பட்டு வரும் கௌது முஹ்யித்தீன் பெண்கள் தைக்கா வளாக இடம் போதுமானதாக இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு, தைக்காவின் கிழக்குப் பகுதியில் பெறப்பட்டுள்ள 1200 சதுர அடி நிலத்தில் மத்ரஸா கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டுமென நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டு, நேற்று (19.09.2010) இரவு 7 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைத் தலைவரும், நகரின் தென்பகுதியில் இப்படியொரு கல்வி நிறுவனம் மிகவும் அவசியம் என்ற கருத்தைக் கொண்டவரும், அதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருபவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் துஆ ஓதி நிகழ்வைத் துவக்கி வைத்தார்.
பெறப்பட்டுள்ள 1200 சதுர அடி நிலத்தில், துவக்கமாக 600 சதுர அடியில் மட்டும் பத்து லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மத்ரஸா செயலாளர் ஹாஜி எம்.அஹ்மத் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் மத்ரஸா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த மத்ரஸாவின் அவசியம் குறித்து, கத்தீப் மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஹாஜி எம்.எம்.உவைஸ், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி எம்.அஹ்மத் ஆகியோர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
தாங்கள் வேறு ஜமாஅத்துகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், இவ்விடத்தில் இப்படியொரு மத்ரஸா தேவை என்பதை உணர்ந்தே இயன்றளவுக்கு இது விஷயத்தில் ஆர்வம் காட்டி வருவதாகவும், இந்த பகுதியைச் சார்ந்தவர்கள் இது விஷயத்தில் தங்களை விட அதிக மடங்கு அக்கறை காட்டுபவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் ஹாஜி எம்.எம்.உவைஸ் அப்போது தெரிவித்தார்.
தனது வயதைப் பற்றிக் கவலைப்படாமல், இது விஷயத்தில் தான் அதிக அக்கறை செலுத்தப் போவதாக ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி அப்போது தெரிவித்தார்.
இந்த மத்ரஸா விஷயத்தில் ஆர்வம் காட்டும் இன்னும் பலரையும் அடையாளங்கண்டு, அவர்களையும் உள்ளடக்கிய புதிய நிர்வாகத்தை விரைவில் அமைக்க உத்தரவு தர வேண்டுமென கூட்டத்தில் கலந்துகொண்டோரிடம் ஹாஜி எம்.அஹ்மத் கேட்டுக் கொண்டார். கூட்டம் அதனை அங்கீகரித்தது.
கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க, தமது முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில், அதன் கிளையாக இந்த மத்ரஸாவை வழிநடத்த ஒப்புக்கொள்வதாக மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தெரிவித்தார்.
துவக்கமாக, ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி எம்.அஹ்மத், ஹாஜி காஜா முஹ்யித்தீன் ஆகியோரைக் கொண்ட வங்கி கூட்டுக் கணக்கு (joint account) ஒன்றை, இருவர் கைச்சான்றிட்டு பணம் பெறும் முறைப்படி துவக்க தீர்மானிக்கப்பட்டது. ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய கட்டிடப் பணிக்கு மதிப்பிடப்பட்டுள்ள மொத்த செலவு பத்து லட்சம் ரூபாய் என்றும், தற்சமயம் ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ள மத்ரஸா செயலாளர் ஹாஜி எம்.அஹ்மத்,
இப்புதிய கட்டிடம் குறித்து தகவல்கள் அறிய விரும்புவோரும், இதற்காக தமது பங்களிப்பைத் தர விரும்புவோரும், ஹாஜி எம்.எம்.உவைஸ் அவர்களை +91 4639 280375 என்ற அவரது இல்ல தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
|