இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்பாடும் புர்தா மஜ்லிஸ் மற்றும் நஅத் மஜ்லிஸ், 17.09.2010 அன்று மாலை 5 மணிக்கு, காயல்பட்டினம் ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது.
மவ்லவீ ஊண்டி எம்.எம்.செய்யித் முஹம்மத் பாக்கவீ தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாஜி எம்.இசட்.ஜலீல் முஹ்யித்தீன் காதிரீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் ஃபாழில் பாக்கவீ, மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் சிராஜுத்தீன் பாக்கவீ, மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் உமர் ஃபாரூக் அஃளம் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ‘புர்தாவின் மகிமை‘ என்ற தலைப்பிலும், மவ்லவீ நிஜாமுத்தீன் அஹ்ஸனீ, ‘சமுதாயம் அன்றும் இன்றும்‘ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
பின்னர் புர்தா மஜ்லிஸ் துவங்கியது. இதனை, கேரளாவைச் சார்ந்த ஸாதிக் அலீ குழுவினர் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து சிறுவர் சன்மார்க்கக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காயல்பட்டினம் முஹ்யித்தீன் மாணவர் மன்றத்தின் சிறுவர்கள் தஃப்ஸ் முழக்கத்துடன் பாடல்களும், பெங்களூர் சிறுவர்களான அஹ்மத் நபீல், முஹம்மத் முஈனுத்தீன் ஆகியோர் உர்தூ மொழியில் நபிகளார் புகழ்பாடும் நஅத் பாடல்களும் பாடினர். பின்னர், ஹாஃபிழ் கே.ஏ.எம்.உஸ்மான் ஸலாம் பைத் பாடினார்.
இறுதியாக, மவ்லவீ ஹாஃபிழ் ஷிஹாபுத்தீன் தங்ஙள் ஷக்காஃபீ துஆவுடன் மஜ்லிஸ் நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 950 ஆண்களும், 700 பெண்களும் கலந்துகொண்டனர். பெண்களுக்கு அசைபட உருப்பெருக்கி திரை மூலம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை காயல்பட்டினம் முஹ்யித்தீன் மாணவர் மன்றத்தினர் விமரிசையாக செய்திருந்தனர். நிகழ்ச்சிகளனைத்தும் காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான முஹ்யித்தீன் டிவியிலும், வலைதளம் மூலமாகவும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
சென்ற ஆண்டும் இதே ஷவ்வால் 6ஆம் நாளில் இதுபோன்றதொரு நிகழ்ச்சி காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
முஹ்யித்தீன் மாணவர் மன்றம் சார்பாக,
J.M.அப்துர்ரஹீம்,
மகுதூம் தெரு, காயல்பட்டினம். |