காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் மாணவியர் விடுதி புதிய கட்டிட திறப்பு விழா இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறுகிறது.
திறப்பு விழா நிகழ்ச்சிகள் குறித்து கல்லூரியின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
படைப்பாளனையும், படைப்பினங்களையும் பிரித்தறிவிக்கும் ஏகத்துவக் கொள்கையை தமிழ் பேசும் உலகெங்கும் எடுத்தியம்பும் பணியின் ஒரு முக்கிய அம்சமாக, பெண்கள் சமுதாயத்திற்கு சத்திய மார்க்கத்தை அதன் தூய வடிவில் கற்பிக்கும் நன்னோக்கத்தில், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டதே எமது ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி.
மூன்றாண்டு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் இக்கல்லூரியிலிருந்து இதுவரை நூற்றுக்கணக்கான ‘ஆலிமா சித்தீக்கிய்யா‘க்கள் உருவாகி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் மட்டுமின்றி, உலகின் தமிழ் பேசும் பல நாடுகளிலும் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்தியம்பும் பணியை இறையருளால் செய்து வருகின்றனர்.
கல்லூரி துவங்கிய நாள் முதல் இன்று வரை தனி விடுதிக் கட்டிடம் இல்லாததால், கல்லூரியின் வகுப்பறைக் கட்டிடத்தின் முதல் தளம் இதுவரை மாணவியர் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
மிகுந்த சிரமங்களுக்கிடையில் இவ்வாறு நடத்தப்பட்டு வந்த எம் கல்லூரிக்கு இறையருளால் இன்று விடுதிக் கட்டிடம் தனியாக கட்டப்பட்டு, தரை தளப் பணிகள் முடிவுற்றுள்ளன. இன்ஷாஅல்லாஹ் இன்னும் மூன்று மாதங்களில் முதல் தளப் பணிகளும் திட்டமிட்ட படி நிறைவுபடுத்தப்படும்.
தரை தளப் பணிகள் நிறைவுற்றுள்ளதைத் தொடர்ந்து, கல்லூரி புதிய விடுதிக் கட்டிடத்தின் திறப்பு விழா எதிர்வரும் 24.09.2010 அன்று மாலை 05.00 மணிக்கு, புதிய விடுதிக் கட்டிட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பொதுமக்களும் இதையே அழைப்பாக ஏற்று, அவசியம் இத்திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
திறப்பு விழா நிகழ்ச்சிகளனைத்தும் காயல்பட்டினம் IIM TVயில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு அவர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
M.A.அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். |