காயல்பட்டினத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று நள்ளிரவில் கனமழை பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாட்களில் துவங்கும் வாய்ப்புள்ளதென சென்னை வானிலை ஆய்வு நடுவம் அறிவித்துள்ள நிலையில், நேற்று மாலை 05.00 மணி முதல் காயல்பட்டினத்தில் மேகங்கள் கருத்து, வானம் இருண்டு, மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இரவில் மின்னல் பளிச்சிடுவதும், சிறிது இடி இடிப்பதுமாக நேரம் கழிந்தது.
மழையைப் பெரிதும் எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கையில், அவ்வப்போது வானத்தில் மேகங்கள் கருத்து இருண்ட நிலையில் காட்சி தருவதும், சிறிது நேரத்தில் கலைந்துவிடுவதும் காயல்பட்டினத்தில் வாடிக்கையாகி விட்டிருந்த நிலையில், சுற்றுப்புறப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில், இன்று நள்ளிரவில் காயல்பட்டினத்திலும் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. |