காயல்பட்டினம் கடற்கரை எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்து, உள்ளூர் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கடற்கரையைத் திகழச் செய்யும் நோக்கில், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் கருத்து சேகரிப்புப் படிவம் அச்சிடப்பட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிகளில் கடந்த 22.10.2010 நடைபெற்ற ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை நகரின் முக்கிய பொதுநல அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஒப்படைக்கக் கோரப்பட்டுள்ளது.
தற்சமயம் உள்ளூரில் இல்லாத காயலர்களும் தமது விருப்பத்தைப் பதிவு செய்திடும் பொருட்டு காயல்பட்டினம்.காம் வலைளத்திலும் அப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆன்லைனிலும், நேரடியாகவும் ஆர்வத்துடன் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். காயல்பட்டினம் நகரின் ஒட்டுமொத்த மக்களும் இக்கருத்து சேகரிப்புப் படிவத்தை நிரப்பி ஒப்படைத்தால், அதனடிப்படையில் மேற்கொள்ளப்படும் மேல் நடவடிக்கைகள் அனைத்தும் நகரின் ஒட்டுமொத்த குரலாக அமையும் என்பதைக் கருத்தில் கொண்டு, இதுவரை தமது கருத்துக்களைப் பதிவு செய்யாதோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், கடைசித் தேதி 28.10.2010 என்றிருந்ததை மாற்றி, 31.10.2010 வரை கருத்துக்களைப் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கருத்து சேகரிப்புப் படிவம் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள், காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகிலுள்ள “மெட்ரோ” நிறுவனத்திலும், பிரதான வீதி - ஹாஜியப்பா தைக்கா பள்ளி காம்ப்ளக்ஸிலுள்ள “விளக்கு 2000” நிறுவனத்திலும் படிவத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நகர பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கருத்துப்பதிவு செய்யுமாறு காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ கேட்டுக் கொண்டுள்ளார். |