ஆறுமுகநேரி தொடர்வண்டி நிலையத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஓருவார காலத்தில் இப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் - நெல்லை மீட்டர் கேஜ் இருப்புப் பாதையாக இருந்த காலகட்டத்தில் ஆறுமுகநேரியிலிருந்து டன் கணக்கில் வெளிமாநிலங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேபோல சீனி, பருப்பு வகைகள் வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு இங்கிருந்து அனுப்பப்பட்டு வந்தது. உப்பு ஏற்றுமுதி மூலமும், இறக்குமதி மூலமும் தென்னக ரெயில்வேக்கு பல லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைத்தது.
இந்நிலையில், திருச்செந்தூர் - நெல்லை வழித்தடத்தில், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அகல இருப்புப் பாதையில் பயணிகள் தொடர்வண்டி இயக்கப்பட்டு வருகிறது. அப்போதே ஆறுமுகநேரி தொடர்வண்டி நிலையத்தில் சரக்கு ஏற்றுமதி - இறக்குமதிக்கு உரிய நடைமேடை மற்றும் கிட்டங்கிகள் அமைக்கப்பட வேண்டும் என தொடர்வ்ணடித்துறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஆறுமுகநேரி தொடர்வண்டி நிலையத்தில் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான நடைமேடை அமைக்க உத்தரவிடப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
ஆறுமுகநேரி தொடர்வண்டி நிலையத்தின் மூன்றாவது இருப்புப்பாதை அமைந்தள்ள பகுதியில் 650 மீட்டர் தொலைவும், 13 மீட்டர் அகலமும் கொண்ட சரக்கு ஏற்றுமதி - இறக்குமதி நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமேடைல் 2 உயர்கோபுர மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆறுமுகநேரி தொடர்வண்டி நிலையத்திலுள்ள சரக்குகளைக் கையாளுவதற்கான நடைமேடை மூலம் உப்பு ஏற்றுமதி விரைவில் துவக்கப்பட உள்ளது. அதேபோல, சாகுபுரம் டிசிடபிள்யூ. ஆலை மற்றும் உடன்குடி அனல் மின் நிலையம் ஆகியவற்றுக்கான நிலக்கரி இறக்குமதியும் வரும் ஜனவரி மாதவாக்கில் துவக்கப்படலாம் என தொடர்வண்டித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன் |