விண்வெளியில் பயணம் செய்யவேண்டும் என்பது நம் பலரின் ஆசைகளில் ஒன்று. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) உதவி மூலம் இவ்வாய்ப்பு நம் புகைப்படத்திற்கு இப்போது கிடைத்துள்ளது!
நாசாவின் முப்பது ஆண்டு கால விண்வெளி ஓட பயணங்கள் (SPACE SHUTTLE MISSIONS) இன்னும் இரு பயணங்களுடன் நிறுத்தப்பட உள்ளன. நாசாவின் அடுத்த விண்வெளி ஓட பயணம் வரும் நவம்பர் 1 அன்று (இந்திய நேரப்படி நவம்பர் 2 அதிகாலை 1:30 மணிக்கு) நடைப்பெற உள்ளது. அன்று அமெரிக்க மாநிலம் ப்ளோரிடாவில் இருந்து டிஸ்கவரி (DISCOVERY) விண்வெளி ஓடம் ஏவப்படவுள்ளது. ஆறு விஞ்ஞானிகள் இதில் பயணம் செய்கிறார்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க இப்பயணத்தில் எதோ ஒரு வகையில் பலர் பங்கு கொள்ள வாய்ப்பு கொடுக்க நாசா முடிவு செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆர்வமுள்ளவர்கள் தங்கள் புகைப்படத்தை இணையதளம் மூலம் அனுப்ப நாசா கூறியுள்ளது. அப்புகைப்படங்கள் விண்வெளி ஓடத்தில் பயணம் செய்யும் என்றும், புகைப்படம் அனுப்ப விரும்பாதவர்கள் தங்கள் பெயர்களை மட்டும் அனுப்பலாம் என்றும் நாசா கூறியுள்ளது.
விண்வெளி ஓடம் பூமி திரும்பியவுடன் இணையதளம் மூலம் பதிவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் (இணையதளம் மூலம்) வழங்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. பதிவு செய்வதற்கான இணையதள முகவரி http://faceinspace.nasa.gov.
பதிவு செய்பவர்கள் 13 வயதை தாண்டியவராக இருக்க வேண்டும். வெற்றிகரமாக பதிவு செய்தவுடன் ஒப்புதல் எண் (Acknowledgement Number) வழங்கப்படும். விண்வெளி ஓடம் பூமி திரும்பியவுடன் (நவம்பர் 12) அந்த ஒப்புதல் எண் கொண்டு அதே இணையத்தளத்தில் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
நவம்பர் 1க்கு முன்னர் பதிவு செய்யமுடியாதவர்கள் எண்டவர் (ENDEAVOUR) விண்வெளி ஓடத்தில் தங்கள் புகைப்படத்தை அனுப்பலாம். எண்டவர் தன் இறுதி பயணத்தை பிப்ரவரி 27, 2011 அன்று மேற்கொள்ள உள்ளது.
உலகளவில் வானவியல் துறையில் - குறிப்பாக விண்வெளி பயண துறையில் - அனைவர்க்கும் ஆர்வத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டுள்ள இவ்வறிவிப்பினை தொடர்ந்து இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேர் நாசா சிறப்பு இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து சுமார் இருபதாயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
காயல்பட்டணத்தில் இதில் ஆர்வமுள்ள மாணவர்களும், பிறரும் பங்கு கொள்ள ஏற்பாடுகளை செய்ய காயல்பட்டண வானவியல் சங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு நகரில் விரைவில் செய்யப்படும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross