காயல்பட்டினம் - காயிதேமில்லத் நகரில் நேற்று காலையில் நடைபெற்ற திருமண விருந்தொன்றில், கைகளில் மஞ்சள் நிற கையுறைகளும், சிவப்பு நிற சீருடையும் அணிந்து பம்பரமாகச் சுற்றிப் பணியாற்றிக் கொண்டிருந்தனர் சமையல் பணியாளர்கள்.
பிரைட்சன் சமையல் குழு என்ற பெயரில், காயல்பட்டினம் - மங்களாபுரம் பகுதி சுனாமி நகரைச் சார்ந்த முத்து முஹம்மத் என்பவரின் தலைமையில் துவக்கப்பட்டுள்ள இச்சமையல் குழு, திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெறுமிடங்களில் சுறுசுறுப்புடன் பணியாற்ற ஆயத்தமாக உள்ளனர்.
இதுபற்றி, பிரைட்சன் சமையல் குழு தலைவர் முத்து முஹம்மத் இடம் கேட்டபோது,
நகரங்களுக்கிணையாக நமதூரிலும் சுத்தமான முறையில் சமையல் பணிகளைச் செய்திட நாங்கள் ஆர்வத்துடன் துவக்கியுள்ளதே இந்த பிரைட்சன் சமையல் குழு.
விசேஷங்கள் நடைபெறும் இடங்களில், சுத்தம் செய்வதற்கான ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நிலையை வைக்காமல், அவர்களின் சீருடையைப் பார்த்தே அடையாளங்கண்டு அழைத்தவர்கள் வேலைகளைத் தர வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
உணவுத்தட்டில் வைத்த அதே கையை துப்புரவுப் பணிக்கும் பயன்படுத்தாதிருக்கும் பொருட்டு கைகளில் உறைகளணிந்து துப்புரவுப் பணிகளை மேற்கொள்கிறோம்.
சமையல் (குக்கிங்), வினியோகம் (சப்ளை), துப்புரவு (க்ளீனிங்) ஆகிய ஒன்றோடொன்று இணைந்த மூன்று பணிகளையும் நாங்கள் செய்து தர ஆயத்தமாக உள்ளோம்.
அழைத்தவர்கள் மனம் திருப்திப்படும் வகையில் முழு ஆர்வத்துடன் அனைத்து வேலைகளையும் கச்சிதமாக முடித்துத் தருவதற்காகவே சீருடையுடன் தைரியமாக வலம் வந்துகொண்டிருக்கிறோம்.
பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவரும் காயலர்கள் எமது இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பளிப்பார்கள் என்று பெரிதும் நம்புகிறோம்...
சமையல், வினியோகம் மற்றும் துப்புரவுப் பணிகளுக்காக எங்கள் குழுவை அழைக்க நாடுவோர் +91 90424 52853, +91 97905 24474 என்ற இரண்டு கைபேசி எண்களில் எங்களைத் தொடர்புகொள்ளலாம் என்றார்.
அவர்களின் உடைகளைக் கழுவிய சோப்பை இன்னொரு சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்ற நிலையிலுள்ள - கண்ட இடங்களிலும் கையை உலாவ விட்டு, அதே கையுடன் சமையல் பணிகளையும் மேற்கொள்ளும் “பாரம்பரிய” வழமையைக் கொண்டுள்ள சமையல் குழுவினருக்கிடையில் இவர்களின் இந்த முயற்சி பொதுமக்களிடையே ஆர்வத்தை உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. |