காயல்பட்டினம் கடற்கரை எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்து, உள்ளூர் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அவர்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு, கடற்கரையைத் திகழச் செய்யும் நோக்கில், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில் கருத்து சேகரிப்புப் படிவம் அச்சிடப்பட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிகளில் நேற்று (22.10.2010) நடைபெற்ற ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
இரண்டு பள்ளிகளின் நிர்வாக அனுமதியுடன், பள்ளி பேருரையாளர்கள் (கத்தீப்கள்) மூலமாக பொதுமக்களுக்கு அறிவிப்பும் செய்யப்பட்டதையடுத்து, பொதுமக்கள் ஆர்வத்துடன் கருத்து சேகரிப்புப் படிவத்தைப் பெற்றுக் கொண்டனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை நகரின் முக்கிய பொதுநல அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஒப்படைக்கக் கோரப்பட்டுள்ளது.
தற்சமயம் உள்ளூரில் இல்லாத காயலர்களும் தமது விருப்பத்தைப் பதிவு செய்திடும் பொருட்டு காயல்பட்டினம்.காம் வலைளத்திலும் அப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படிவத்திலும் ஆன்லைனில் பொதுமக்கள் தமது கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. |