ஒரு லட்சம் ரூபாயில் புது கார் ஒன்றை வாங்கலாம் என்று பரபரப்புடன் விளம்பரம் செய்யப்பட்டு வந்த “நானோ” கார், தொலைதூர பயணங்களுக்கு ஒத்ததாக இல்லை என்றும், தீப்பிடித்து முற்றிலும் எரிந்து விடுவதாகவும் நாளிதழ்களில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த மூன்று தினங்களாக காயல்பட்டினத்தை வலம் வந்துகொண்டிருக்கிறது “நானோ” விளம்பர வாகனம்...
விரும்பினால் ஓட்டிப் பார்க்கலாம் என்று ட்ரையல் ட்ரைவிங் வரை கொடுத்து நகரில் விளம்பரம் செய்து வருகின்றனர் “நானோ” விற்பனை முகவரான “சுசீ” நிறுவனத்தார்.
விரும்பும் காயலர்கள் வண்டியை ஓட்டிப் பார்த்துவிட்டு கேட்கும் அடுத்த கேள்வி, “இந்த வண்டி தீப்பிடிக்குமா...?” என்பதுதான்! “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... அந்த எரிந்த வாகனங்களில் சிறு பழுது ஏற்பட்டபோது, “நானோ” கம்பெனியில் சரிசெய்யாமல், வேறிடங்களில் ரிப்பேர் செய்தபோது அதன் மெக்கானிஸம் மாற்றப்பட்டுள்ளதாலேயே அந்த விபத்து ஏற்பட்டது... உற்பத்தியில் எந்தக் குறையுமில்லை!” இது சுசீ நிறுவனத்தாரின் விளக்கம்.
“ஒரு லட்சம் ரூபாய்க்குத் தருவதாக சொல்லிவிட்டு, இப்போ துவக்க மாடலே ஒன்னேகால் லட்சம் என்கிறீர்களே...? அடுத்தடுத்த மாடல்கள் ஒன்றரை லட்சம், இரண்டேகால் லட்சம் என்று கூறுகிறீர்களே...? ஒரு லட்ச ரூபாய் கார் எப்போ வரும்? என்று கேட்டால், “அதாங்க இது!” என கரகாட்டக்காரன் செந்தில் போல பதில் சொல்லப்படுவதாக “நானோ” ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மொத்தத்தில், காயலர்கள் கேட்டுக்கொண்டால் “நானோ”வில் ஒரு ஓசி ரவுண்டு நிச்சயம் உண்டு! |