புதிய கல்வித்துறையைத் தேர்ந்தெடுத்துள்ள மாணவர்களுக்கு, நடைபெற்று முடிந்துள்ள ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
செயற்குழுக் கூட்டம்:
சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 56ஆவது செயற்குழுக் கூட்டம் அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சகோ. எம்.என்.முஹம்மது ஷமீம் இல்லத்தில் நடந்தேறியது.
சகோ.எஸ்.எச்.அப்துல் காதர் தலைமை தாங்கினார். சகோ. அரபி எம்.ஐ.முஹம்மத் ஷுஅய்ப் இறைமறை வசனங்களோடு கூட்டத்தைத் துவக்கி வைத்தார். சகோ. ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அனைவரையும் வரவேற்றார்.
நிதி நிலை:
நாம் இது வரை வழங்கிய உதவிகள், கல்விக்காக நாம் வழங்க இருப்பவை, மன்றத்தின் தற்போதைய இருப்பு போன்ற விபரங்களை பொருளாளர் சகோ. எம்.எம்.எஸ்.ஷேக் அப்துல் காதர் துல்லியமாக சமர்ப்பித்தார்.
மன்ற செயல்பாடுகள்:
நம் மன்றம் செய்த பணிகளை அவருக்கே உரிய எளிய நடையில் சிறப்பாக எடுத்துரைத்தார் செயலர் சகோ. சட்னி செய்யித் மீரான். தொடர்ந்து செயலர் சகோ. எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் பேசுகையில்...
குறும்படம்:
நமதூரின் சுற்றுச்சூழல் - சுகாதாரக் குறைபாடுகளைக் களைய நம் மன்றத்தின் முதன்முயற்சியாக சென்ற ஜூலை திங்களில், காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் அதுகுறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை Health & Hygiene Awareness என்ற தலைப்பில் மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக, இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த மேலும் எவ்வழிகளில் சொன்னால் மக்களை சென்றடையும் என்பதையுணர்ந்து, அதன் ஒரு பகுதியாக கையடக்க பிரதிகள் (pamphlets) மூலமும், குறும்படங்கள் (documentary show) மூலமும் இச்செய்திகளை மக்களுக்கு அறியத் தரலாம் என்றார்.
குப்பைக்கோர் இடம்:
நமதூர் சமூக ஆர்வலர்கள் முயற்சியில் பல இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, “இங்கே குப்பை கொட்டாதீர்” என்று அறிவிப்பு வைத்த பின்னரும், நம் அலட்சியத்தால் அவ்விடம் மீண்டும் மாசுபடுத்தப்படுகிறது என்றும், அவ்வாறு அசுத்தமாக்குவதைத் தவிர்த்து, அவற்றுக்குரிய இடங்களில் குப்பைகளைக் கொட்ட வேண்டுமென்றும், நமதிடங்களை நாமே மாசுபடுத்துவது மிகுந்த வருத்தமளிக்கும் செய்தியாகும் என்றும், நமதூரை தூய்மையான நகரமாக மாற்ற முயற்சிகளை வலிமையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
விபத்தை தவிர்க்க...
நமதூரில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தவிர்க்க முக்கிய இடங்களில் வேகத்தடை அமைத்தல், ஊரின் எல்லைக்குள் வாகனங்கள் நுழைந்தவுடன் குறைந்த வேகத்தில் வாகனத்தை ஓட்ட வலியுறுத்தல் இதுபோன்ற விபத்துக்களை தடுக்கும் முயற்சிகளை நமதூர் பொதுநல அமைப்புக்கள் மேற்கொள்ளவேண்டுமென்றும் சகோதரர்கள் கேட்டுக்கொண்டனர்.
கல்விக்காக...
கல்வி உதவி கோரி வந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அனைத்திற்கும் உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி BE பட்டப்படிப்பினை தெரடர்ந்து படிக்க ஆர்வம் கொண்ட மாணவ, மாணவியர் 6 பேர் மற்றும் B Ed, B Tech - IT, B Tech BE, M.sc - Geo physics போன்ற முதல் வருட படிப்பினை ஆரம்பிக்க 4 மாணவர்கள் என மொத்தம் 10 மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய துறைகளை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவவர்களை மன்ற உறுப்பினர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
வரும் கல்வியாண்டில் புதிய துறைகளைத் தேர்வு செய்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கான தேடலை கல்வித்தளங்களில் நாட வேண்டும். இதை மாணவர்களுக்கு ஒரு கோரிக்கையாக வைக்கிறோம் என்ற மன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் நம் மன்ற வழமைப்படி, அக்டோபர் 15ஆம் தேதி வரை கல்வி உதவி கோரி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனைக்குப் பின் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இனி பெறப்படும் மனுக்கள் அடுத்த கல்வியாண்டின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மருத்துவத்திற்காக...
மருத்துவ உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவர் சகோ. எம்.ஏ.முஹம்மத் ஜியாத் அபூபக்கர் முன்னிலையில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, (ஈரல் புற்றுநோய், முதுகத் தண்டுவட சிகிச்சை, இரத்தம் உறையாமை, இரத்த அனுச்சிதைவு, கர்ப்பப்பை கட்டி போன்ற சுகவீனத்தால் உடல் நலமற்றுள்ள) 5 நபர்களுக்கு உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களின் உடல் நலனுக்காக பிரார்த்திக்கப்பட்டது.
அடுத்த செயற்குழு:
அடுத்த செயற்குழு இன்ஷாஅல்லாஹ் வரும் டிசம்பர் 24ஆம் தேதி இதே இடத்தில் நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.
கூட்ட ஏற்பாடுகள்:
சகோதரர்கள். எம்.என்.முஹம்மது ஷமீம், எச்.கே.எம்.இஸ்மாயீல், கத்தீப் எம்.என்.லெப்பைத்தம்பி ஆகியோர் செயற்குழு கூட்ட ஏற்பாடுகளை வழமை போல் சிறப்பாக செய்திருந்தனர்.
உறுப்பினர் வலீமா:
திருமணம் முடித்து திரும்பிய மணாளன் ஹாபிழ் எஸ்.எம்.ஷேக் ஆலம் தனது வலிமா விருந்தினை இங்கு உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.; சகோ. ஒய்.எம் சாலிஹ் நன்றி கூற பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பாக,
எஸ்.எச்.அப்துல் காதர்
ஜித்தா.
படங்கள்:
ஒய்.எம்.முஹம்மத் ஸாலிஹ்.
மக்கா. |