வால் நட்சத்திரம் ஹார்ட்லி 2 (103-P/Hartley) தற்போது வெறுங்கண்ணுக்கு புலப்படும் நிலையை அடைந்துள்ளது. 1986ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வானவியல் வல்லுனர் மால்கம் ஹார்ட்லி என்பவரால் இவ் வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கிலோ மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட இவ் வால் நட்சத்திரம் சூரியனை 6.5 வருடத்திற்கு ஒரு முறை சுற்றி வருகிறது.
புதன் அன்று (அக்டோபர் 20) பூமிக்கு அருகாமை தூரமான 180 லட்ச கிலோ மீட்டர் தூரத்தை இது அடைந்தது. அக்டோபர் 28 அன்று சூரியனுக்கு அருகாமை தூரத்தை அடையும். இவ்வாரம் இதனை காயல்பட்டணத்தில் கிழக்கு திசையில் நள்ளிரவு 12 மணிவாக்கில் சுமார் 30 டிகிரி உயரத்தில் காணலாம். இது சூரியன் உதயத்திற்கு சில மணி நேரம் முன்பு வானின் உச்சியில் இருக்கும்.
இதன் ஒளி 5.5 Magnitude என வானவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக இருட்டான பகுதிகளில் 6 Magnitude வரை வானவியல் பொருட்கள் வெறுங்கண்ணுக்கு புலப்படும். ஒளி வெள்ள மாசுவினால் (Light Pollution) நகரங்களில் பொதுவாக ஒளி 4 Magnitude வரை வானவியல் பொருட்கள் மட்டுமே வெறுங்கண்ணுக்கு தென்படுகின்றன. (உதாரணத்திற்கு சூரியன்: -26.7 Magnitude, சந்திரன்: -12 Magnitude, வீனஸ்: -4.5 Magnitude, ஜுப்பிட்டர் : -2.2 Magnitude)
எனவே இவ்வால் நட்சத்திரத்தை பார்க்க விரும்புவோர் இருட்டான பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
நவம்பர் 4 அன்று அமெரிக்க செயற்கைகோள் EPOXI, இவ்வால் நட்சத்திரத்தை 700 கிலோ மீட்டருக்கு அருகிலிருந்து படம் எடுக்க உள்ளது.
தகவல்:
காயல்பட்டணம் வானவியல் சங்கம் |