காயல்பட்டினத்தில் இன்று மாலை 06.30 மணியளவில் திடீரென தென்பட்ட பளீர் மின்னல், பேரிடி முழக்கம் நகர பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இன்று மாலை 05.30 மணியளவில் திடீரென மழை மேகம் திரண்டது. 06.15 மணிவாக்கில் மிகச்சிறிய அளவிலான ஒலியுடன் இடி இடித்தது. நகரின் பல பள்ளிவாசல்களில் மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டும், சில பள்ளிவாசல்களில் தொழுகை முடிவுற்று பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டுமிருந்த நேரத்தில், சுமார் 06.30 மணியளவில் திடீரென கண்ணைப் பறிக்கும் பேரொளியுடன் மின்னல் பளிச்சிட்டது. மின்னல் தோன்றி மறைந்த சில வினாடிகளில் பேரிடி முழக்கம் கேட்டது.
இடி முழக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் தென்புறத்தில் அமைந்துள்ள பெரிய மினாராவின் சுண்ணாம்புப் பூச்சு சிறிதளவு பெயர்க்கப்பட்டு, சுற்றுப்புறத்தில் சிதறிக் கிடந்தது.
இந்த திடீர் இடி-மின்னல் நிகழ்வால் நகர பொதுமக்கள் - குறிப்பாக, பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். நகரின் அனைத்து கடைவீதிகளிலும், வீடுகளிலும் இந்த இடி-மின்னல் பற்றித்தான் பேசப்பட்டு வருகிறது.
தகவல்:
Y.M. முஹம்மத் தம்பி,
A.K.M. ஜுவல்லர்ஸ்,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |