இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாடு, வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என்றும், தமிழக முதல்வருக்கு அம்மாநாட்டில் விருது வழங்கப்படவுள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டத்தில், மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் காயல் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், 18.10.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு, தூத்துக்குடி ஹோட்டல் கீதா இன்டர்நேஷனல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மீராஸாஹிப் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் அனைத்து கிளைகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் வரவேற்றுப் பேசினார். காயல் மன்னர் பாதுல் அஸ்ஹப், ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் உள்ளிட்ட - மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த மாவட்ட - நகர நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.
முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து விளக்கவுரையாற்றினார்.
தூத்துக்குடி நகர செயலாளர் நவ்ரங் சகாபுத்தீன் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் காயல் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பின்னர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்ததாவது:-
மாநில மாநாடு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பில், வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதியன்று, “சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்! சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்!!” என்ற முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சென்னை தாம்பரம் இரயில்வே மைதானத்தில் மாபெரும் மாநில மாநாடு நடத்தப்படவுள்ளது.
இம்மாநாட்டில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, “நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்” விருது வழங்கப்படவுள்ளது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தியுள்ள அவருக்கு சமுதாயத்தின் நன்றியறிவிப்பாக இந்த விருதை அவருக்கு வழங்குவதென மாநில நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இம்மாநாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 5,000 பேருக்கு மேல் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடல்:
தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டும் என்று நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள உத்தரவை - பொதுமக்கள் நலன் கருதி, மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இந்த ஆலையிலிருந்து வெளியாகும் மாசு காரணமாக பொதுமக்கள் நலனுக்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, போபாலில் நடைபெற்ற விஷவாயுக் கசிவு உயிரிழப்பு சம்பவத்தை நமக்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. எனவே, இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
முதலியார்பட்டியில் பச்சிளம் குழந்தை கொலை:
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, ரவணசமுத்திரம் அருகிலுள்ள முதலியார்பட்டி என்ற ஊரில், வீட்டில் தனியாக இருந்த முஸ்லிம் பெண்ணை இந்து ஒருவர் பலவந்தப்படுத்தி பாலியல் வன்முறை செய்ததோடு, அந்த வீட்டில் தொட்டிலில் கிடந்த ஒன்றரை வயது பச்சிளங்குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஏற்கனவே இதே ஊரில், குளிக்கச் சென்ற முஸ்லிம் பெண் ஒருவரை குளத்தில் தள்ளிவிட்டு, பாலியல் வன்முறை செய்ய முனைந்த சம்பவத்தையொட்டி, தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததாலேயே இச்சம்பவங்கள் தொடர்கின்றன.
இச்சம்பவம் குறித்து அந்த ஊரிலுள்ள அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் ஒன்றுகூடி கலந்தாலோசனை செய்துள்ளனர். இதுகுறித்து, நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நான் தொடர்புகொண்டு பேசியுள்ளேன். திறமைமிக்க தமிழக காவல்துறை, நடைபெற்றுள்ள இச்சம்பவம் குறித்து தகுந்த நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தூ-டி ஜாமிஆ பள்ளி சொத்து ஆக்கிரமிப்பு:
தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள - தூத்துக்குடி ஜாமிஆ பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து குடிசை போட்டு குடியிருந்து வரும் 30 குடும்பத்தினரையும் அங்கிருந்து காலி செய்யச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவையடுத்து, பள்ளிவாசல் நிர்வாகிகள், ஆக்கிரமிப்பாளர்கள் கலந்துகொண்ட சமாதானக் கூட்டத்தில், வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தாங்கள் அவ்விடத்தை விட்டும் காலி செய்துவிடுவதாக ஆக்கிரமிப்பாளர்கள் எழுத்து மூலம் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இப்பிரச்சினையின் போக்கு இவ்வாறு நல்ல விதமாகச் சென்றுகொண்டிருக்க, இதனை ஊதிப் பெரிதாக்கி, பிணக்குகளை வளர்க்க நினைப்பவர்களின் போக்கை முஸ்லிம் சமுதாயமும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் ஒருபோதும் வரவேற்காது. இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நியாய நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் லீக் முழு ஆதரவளிக்கும்.
திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூடு சம்பவம்:
கடந்த ரமழான் மாத இறுதியில், திருவிடைச்சேரியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில், முஸ்லிம் பெயர்தாங்கி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்.
இது ஒருபுறமிருக்க, இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் சமுதாய அமைப்புகள் பல இணைந்து குரலெழுப்பியுள்ளது. எந்தவொரு சமுதாய அமைப்பையும் தடை செய்யும் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருபோதும் வரவேற்காது. இது முஸ்லிம் லீகின் மரபுமல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மணிச்சுடர் இ-பேப்பர்:
சமுதாயச் செய்திகளையும், உள்நாடு மற்றும் சர்வதேச இஸ்லாமிய செய்திகளையும் ஆதாரப்பூர்வமாக சமுதாயத்திற்குத் தந்துவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் “மணிச்சுடர்” நாளிதழ், “பிறைமேடை” வார இதழ் ஆகியவற்றை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணையதளத்தில் இ-பேப்பராக பார்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செய்திகள் உடனுக்குடன் உலகம் முழுக்க சென்று சேர்கிறது என்பதையும், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும் நல்ல அம்சம் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். |