நடுவண் அரசின் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் உதவித்தொகைகளைப் பெறுவதற்காக, மாணவியரால் சமர்ப்பிக்கப்படும் விண்ணங்களுடன் இணைக்கப்படும் சான்றிதழ்களிலுள்ள சிறு சிறு எழுத்துப் பிழைகளைக் காரணங்காட்டி, அவர்கள் உதவித்தொகையைப் பெற்றிட முட்டுக்கட்டையாக இருப்பதாக, காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை மீது காயல்பட்டினம் மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நமதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் பெற்றோரிடமிருந்து, சில மாதங்களுக்கு முன்பாக, மத்திய அரசின் சிறுபான்மை கல்வி உதவித்தொகை கிடைப்பதில் உள்ள சிரமங்களுக்கு நிவாரணம் வேண்டி, பொதுச்சேவையாளர் என்ற முறையில் எனக்கு அழைப்புகள் வந்தன.
என்னவென்று விசாரித்ததில், மேற்படி தீவுத்தெரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை அவர்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்வதற்கு குடும்ப அட்டையில் ஒரு சிறிய எழுத்துப் பிழை இருந்தாலும், “அதையும் திருத்தம் செய்து தந்தால்தான் பரிசீலனைக்கு அனுப்பப்படும்... திருத்தம் செய்து தரப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதனால் இந்த 2010 – 11ஆம் வருட கல்வி உதவித்தொகைக்கு பலர் விண்ணப்பம் செய்ய முடியாமல் போய்விட்டது.
மேலும் பலரிடம் (மாணவியரின் பெற்றோரிடம்) இந்த ஆண்டு கல்வி உதவித்தொகை, குடும்ப அட்டை திருத்தம் செய்ய முடியாததால், கல்வி உதவித்தொகை தேவையில்லை என்று எழுத்துப்பூர்வமாக தலைமையாசிரியை கையொப்பம் வாங்கி வைத்துள்ளார். (இத்தகவல் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கிடைத்தது.)
இது விஷயமாக, மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் என்ற முறையில் நேரடியாக தலைமையாசிரியை அவர்களிடம், “இப்படியெல்லாம் அலைக்கழிக்காதீர்கள்!” என்று கூறியதற்கு, “குடும்ப அட்டையில் திருத்தம் செய்யவேண்டும்... அப்படி விதியில்லை என்பதற்கு உரிய அலுவலரிடம் எழுதி வாங்கித்தாருங்கள்!” என்று கூறினார்.
இது தொடர்பாக நான், சம்பந்தப்பட்ட சென்னை சிறுபான்மை ஆணையர், மாவட்ட சிறுபான்மை அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கேட்டதன் அடிப்படையில், கல்வி உதவித்தொகை பெற குடும்ப அட்டையில் திருத்தம் தேவையில்லை என்று மாவட்ட கல்வி அதிகாரியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்று வைத்துள்ளேன்.
இது விஷயமாக, மேற்படி பள்ளியின் தலைமையாசிரியை அவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது; சிறுபான்மை மாணவியர் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் மேற்படி தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, உரிய அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும், தபால் மூலமும் வேண்டிக்கொண்டுள்ளோம்.
மாவட்ட கல்வி அதிகாரியின் நடவடிக்கையைப் பொருத்து எமது அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என்பதை தெரியப்படுத்துகிறோம். இது விஷயமாக, மாவட்ட கல்வி அதிகாரி கேட்டுக்கொண்ட படி, நீங்களும் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரிய யு.திருமலையிடம் நாம் நேரடியாக விளக்கம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:-
சிறுபான்மை மாணவியருக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மாணவியர், BC, MBC, BCM ஆகிய பிரிவுகளைச் சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்;
50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்;
வேறு உதவித்தொகைகள் எதுவும் பெற்றிருக்கக் கூடாது
போன்ற விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கும் மாணவியரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவியர் பலரின் விண்ணப்பங்களுடனான இணைப்புச் சான்றிதழ்களில் உள்ள பெயருக்கும், நம் பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருந்தால், அம்மாணவியரை மட்டுமே குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம் செய்து கொண்டு வருமாறு நாங்கள் கூறுகிறோம்.
சில மாணவியர் அவ்வாறு திருத்தம் செய்து கொண்டு வந்து தருகின்றனர். பெரும்பாலான மாணவியர் அதிலுள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, உதவித்தொகை தங்களுக்குத் தேவையில்லை என்று தெரிவிக்கின்றனர். அவ்வாறு உதவித்தொகை தேவையில்லை என்று தெரிவிக்கும் மாணவியரிடம், எழுத்துப்பூர்வமாக நாங்கள் கடிதம் பெற்றுக்கொள்கிறோம்…
“திருத்தம் செய்தால்தான் கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்று அரசு ஆணை ஏதுமில்லை“ என தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் கடிதம் மூலம் மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பிற்குத் தெரிவித்திருக்கிறாரே...? என்று நாம் கேட்டபோது,
எங்களிடம் கணக்குத் தணிக்கைக்காக (ஆடிட்டிங்) அலுவலர்கள் வந்து பதிவுகளைப் பார்க்கும்போது, இதுபோன்ற விண்ணப்பங்களை சரிசெய்யாமல் நான் அனுப்பியிருந்தால், அதற்காக நாங்கள்தான் கண்டிக்கப்படுகிறோம்... எனவேதான், செய்வதை முறையாகச் செய்துவிடுவோம் என்ற அடிப்படையில் நான் இவ்வேலைகளைச் செய்து தரச் சொல்கிறேன்...
இந்த விதிமுறைகளை ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கே நாங்கள் விதிக்கிறோம்... அதே நேரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியரின் பெயர்களை அரசுத் தேர்வுக்காக பள்ளியிலிருந்து அனுப்பி வைக்கும்போது, நாங்களே மிகுந்த கவனம் செலுத்தி, குடும்ப அட்டையிலும், பள்ளியின் பெயர் பதிவிலும் வேறுபாடுகள் இல்லாதவாறு பெயர் திருத்தம் செய்து அனுப்பி வைக்கிறோம்...
உண்மையில், நாங்கள் இந்த மாணவியருக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணம் கொண்டிருந்தால், நாங்கள் ஏன் அவர்கள் விஷயத்தில் இவ்வளவு ஆர்வம் எடுக்க வேண்டும்...?
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியருக்காக அத்தருணத்தில் நாங்கள் மேற்கொள்ளும் இம்முயற்சி காரணமாக, பிற்காலத்தில் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எவ்வித சிரமமுமின்றி செல்ல முடிகிறது. இதுபோன்ற பெயர் வேறுபாடுகள் உள்ளவர்கள் எந்தளவுக்கு அலைச்சல்களை அப்போது சந்திக்கின்றனர்...? யார் மீதும் குற்றம் சுமத்த முடியாத அத்தருணத்தில் செய்வதறியாது மாணவியர் திகைத்து நிற்பதை விட, இப்போதே அவர்களை சரிசெய்து விடுமாறு நாங்கள் சொல்வதில் தவறு என்ன இருக்கிறது...?
மாணவியரோ அல்லது அவர்களின் பெற்றோரோ பெரும்பாலும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் இவ்விஷயத்தை இந்தளவுக்கு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்பதே என் கருத்து!
பொதுவாக அரசு பள்ளிக்கூடங்களில் அரசுப் பொதுத்தேர்வுகளின்போது தேர்வறை கண்காணிப்பாளராக (Supervisor) ஆண் - பெண் யாரையும் அனுப்புவதுண்டு! ஆனால் எமது பள்ளியில் கோஷா பெண்கள் படிப்பதைக் கருத்தில் கொண்டு, யாரும் கோரிக்கை வைக்காத நிலையிலும் நாங்களாகவே முயற்சிகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டு, பெண் கண்காணிப்பாளர்களை வரவழைக்க பல்லாண்டுகளாக ஏற்பாடு செய்து தருகிறோம்... மாணவியரிடம் நாங்கள் எந்த உள்நோக்கத்தோடும் செயல்படுவதில்லை என்பதை, அவர்களிடம் நேரடியாகவே கேட்டறிந்துகொள்ளலாம் என்றார்.
தங்களுக்கு கல்வி உதவித்தொகை தேவையில்லை என்று எழுதிக்கொடுத்த மாணவியர் சிலரை நாம் நேரில் அழைத்து விசாரித்தபோது, தலைமையாசிரியையோ, இதர ஆசிரியைகளோ ஒருபோதும் தங்களை அவ்வாறு கடிதம் தர கட்டாயப்படுத்தியதில்லை என்றும், ஓரிரு வருடங்கள் பொறுத்திருந்தால், பத்தாம் வகுப்பில் எவ்வித அலைச்சலுமின்றி, பள்ளியிலிருந்தவாறே பெயர் திருத்தமும் செய்து, உதவித்தொகைக்கும் எங்களால் விண்ணப்பிக்க முடியும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தாம் அவ்வாறு எழுதிக் கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். |