தமிழ்நாட்டில் இருந்து முதல் கட்டமாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் 460 ஹஜ் பயணக் குழுவினரை துணை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
ஹஜ் பயணிகளை வாழ்த்து துணை முதலமைச்சர் பேசியதாவது:-
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் உங்களை தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் சார்பாக வாழ்த்தி வழியனுப்பி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் இஸ்லாமிய மக்களின், மக்கள் தொகை அடிப்படையில் 2 ஆயிரத்து 700 பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொண்டு வந்தனர். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இஸ்லாமியப் பெருமக்கள் அளித்தனர். அதன் அடிப்படையில் தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், தொடர்ந்து வலியுறுத்தியும், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மேலும் 1541 பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டில் இருந்த வருடத்திற்கு 4 ஆயிரத்து 241 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கிறார்கள். ஹஜ் பயணிகள் எந்தவித பிரச்சினையும் இன்றி புனித பயணத்தை நிறைவேற்ற தக்க வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், டி.பி.எம். மைதீன் கான், கவிஞர் கனிமொழி எம்.பி., தமிழ்நாடு ஹஜ் குழு செயல் அலுவலர், கா. அலாவுத்தீன், இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர், பிரசிடெண்ட் அபூபக்கர், இந்திய ஹஜ் கமிட்டியில் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர், ஜாகிர் ஹுசைன், திருப்பூர் அல்தாஃப், தமிழக அரசின் கூடுதல் குற்றத்துறை தலைமை அரசு வழக்கறிஞர், ஹசன் முஹம்மது ஜின்னா ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
தலைமைச் செயலகம், சென்னை - 9.
புகைப்படம்:
தினத்தந்தி
|