காயல்பட்டினம் கடற்கரையை, நகரில் தொன்றுதொட்டு பேணப்பட்டு வரும் கலாச்சாரப் பாதுகாப்பு, சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் பராமரிப்பதற்கென அண்மையில் துவக்கப்பட்டு அரசுப் பதிவும் செய்யப்பட்டுள்ளது காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம்.
உள்ளூர் மட்டுமின்றி, சுற்றுவட்டாரங்களைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் இக்கடற்கரையின் சீரமைப்புப் பணிகளை காயல்பட்டினம் நகர்மன்ற நிர்வாகத்தின் துணையுடனும், பாதுகாப்புப் பணிகளை ஆறுமுகநேரி காவல்துறை துணையுடனும் செயல்படுத்திட இவ்வமைப்பு தீர்மானித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நிர்வாக அதிகாரி கணேசன், நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களை, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து, ஒத்துழைப்பு கோரும் கடிதத்தை அளித்தனர். நகர்நலனுக்காக தேவைப்படும் ஒத்துழைப்புகளையும் தருவதாக அவர்கள் அப்போது தெரிவித்தனர்.
கடற்கரை பாதுகாப்பு ஏற்பாடுகள் விஷயத்தில் காவல்துறையின் ஒத்துழைப்பைக் கோரும் பொருட்டு, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க தலைவர் மெட்ரோ நஸீர் அஹ்மத், செயலாளர் எல்.எம்.இ.கைலானீ, செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஜரூக், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் அடங்கிய குழு நேற்றிரவு 09.30 மணிக்கு, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பார்த்திபனை, ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் சந்தித்துப் பேசி, ஒத்துழைப்பு கோரும் கடிதத்தை அளித்தனர்.
அனைத்தையும் கேட்டறிந்த காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன், காயல்பட்டினம் நகரின் அமைதி கெடாத வகையில், தேவைப்படும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விரைவாக செய்து தருவதாகவும், இச்சங்கத்தினர் எந்நேரத்தில் முறையிட்டாலும், அதனடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது உறுதியளித்தார். |