காயல்பட்டினத்திலிருந்து ஹஜ் பயணத்திற்காக சென்னை புறப்பட்ட ஹஜ் பயணியரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நல்லகண்ணு நேரில் வாழ்த்தினார்.
இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள சுமார் 10 ஹாஜிகள், நேற்று மாலை காயல்பட்டினத்திலிருந்து, தூத்துக்குடி முத்துநகர் விரைவுத்தொடர்வண்டி மூலமாக சென்னை புறப்பட்டுச் சென்றனர்.
தூத்துக்குடி தொடர்வண்டி நிலையத்தில் புறப்படுவதற்காக ஆயத்தமாக இருந்த அவர்களை, அதே வண்டியில் சென்னைக்குப் பயணம் செய்யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நல்லகண்ணு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படுவதற்கெதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்துகொண்டு அவர் சென்னை திரும்புவதற்காக தூத்துக்குடி தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்தபோது இச்சந்திப்பு நிகழ்ந்தது.
காயல்பட்டினம் ஹஜ் பயணியரை வழியனுப்புவதற்காக நாற்சக்கர வாகனங்களில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தூத்துக்குடி தொடர்வண்டி நிலையத்திற்கு நேற்று மாலை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
|