இந்தியாவிலிருந்து ஹஜ் பயணிகளை ஏற்றி செல்லும் பணி அக்டோபர் 9 அன்று துவங்கியது. அன்று இந்தூரிலிருந்து 180 பயணிகளை ஏற்றிக்கொண்டு - இந்தியாவிலிருந்து நாஸ் ஏர்லைன் உடைய முதல் விமானம் - ஜித்தாவில் இரவு 11:00 மணிக்கு தரையிறங்கியது.
இவ்வருடம் இந்தியாவிலிருந்து 170,491 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில் 125,000 பேர் இந்திய ஹஜ் குழு மூலமாகவும், 45,491 பேர் தனியார் ஹஜ் குழு மூலமாகவும் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதற்காக இந்திய ஹஜ் குழு அக்டோபர் 9 முதல் நவம்பர் 9 வரை 431 விமான சேவைகளை இயக்க உள்ளது. தினசரி சராசரியாக 14 விமானங்கள் 21 இந்திய நகரங்களிலிருந்து இயக்கப்படவுள்ளன. அந்நகரங்கள் அஹ்மதாபாத், அவுரங்காபாத், பெங்களுரூ, போபால், கோழிக்கோடு, சென்னை, டில்லி, கோவா, கவுஹாதி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்பூர், கொல்கத்தா, லக்னோ, மங்களுர், மும்பை, நாக்பூர், ராண்சி, வாரணாசி, பாட்னா மற்றும் ஸ்ரீநகர்.
சராசரியாக ஒரு நாளுக்கு 4000 பயணிகள் மூன்று ஏர்லைன்களால் ஏற்றிச்செல்லபடுவர். சவுதி ஏர்லைன் 269 விமானங்களில் 85,922 பயணிகளையும், அல் வாஃபர் ஏர்லைன் 57 விமானங்களில் 15,360 பயணிகளையும், நாஸ் ஏர்லைன் 105 விமானங்களில் 22,924 பயணிகளையும் ஏற்றிச்செல்கின்றன.
53,500 பயணிகளை ஏற்றிக்கொண்டு 187 விமானங்கள் ஜித்தாவிலும், 70,500 பயணிகளை ஏற்றிக்கொண்டு 244 விமானங்கள் மதினாவிலும் தரையிரங்கும். திரும்பும் திசையில் 75,000 பயணிகளை ஏற்றிக்கொண்டு 255 விமானங்கள் ஜித்தாவிலிருந்தும், 49,000 பயணிகளை ஏற்றிக்கொண்டு 176 விமானங்கள் மதினாவிலிருந்தும் புறப்படும்.
இந்திய தூதரகத்திற்கு உதவியாக 5 மூத்த அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளர்களாகவும், 135 மருத்துவர்களும், 146 மருத்துவ உதவியாளர்களும், 51 ஹஜ் உதவி அலுவலர்களும், 181 ஹஜ் உதவியாளர்களும் - ஆக மொத்தம் 518 பேர் இந்தியாவிலிருந்து உதவி பணிகள் மேற்கொள்ள செல்கின்றனர்.
24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஜித்தாவிலும், மக்காவிலும், மதினாவிலும் மருத்துவ குழுக்கள் இயங்கவுள்ளன. மக்காவில் 50 படுக்கை கொண்ட மருத்துவமனையும், மதினாவில் 10 படுக்கை கொண்ட மருத்துவமனையும் செயல்படும்.
பயணிகள் தங்குவதற்காக 567 கட்டிடங்கள் மக்காவில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஹரத்திலிருந்து 1 கி.மீ. தூரத்திற்குள் 62,400 பச்சை வரிசை பயணிகளும், ஹரத்திலிருந்து 1 கி.மீ. - 1.6 கி.மீ. தூரத்திற்குள் 15,600 வெள்ளை வரிசை பயணிகளும், மீதி 47,000 பயணிகளும் அஜீசியா பகுதியிலும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதினாவில் 70 சதவீத பயணிகள் மர்கசியா பகுதியிலும், மினாவில் வழமையான எல்லைக்குள்ளும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அஜீசியா பகுதியில் தங்கும் 47,000 பயணிகளும் ஹரத்திற்கு சென்றுவர SAPTCO / HAFIL / AL JAZIRA பேரூந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூதரகத்திலிருந்து உதவியாளர்கள் பேரூந்து நிலையங்களில் பயணிகள் உதவிக்காக நிறுத்தப்படுவர்.
|