நாளை அக்டோபர் 10, 2010. இத்தேதியை சுருக்கமாக எழுதினால் நாம் பெறுவது 10-10-10! இது ஒரு ஞாயிற்று கிழமை கூட. நியாபகார்த்தமான நாளாக இருக்கும் என்றே இந்நாளில் பல திருமணங்கள் நடைபெறவுள்ளன. குறிப்பாக சீனாவில். ஏன் - காயல்பட்டணத்திலும் கூட! துபையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 10 கற்பிணி பெண்கள் நாளை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறவும் திட்டமிட்டுள்ளனர்!!
இதற்கு மத்தியில் அக்டோபர் 10, 2010 அன்று காலை 10:10 மணிக்கு (விநாடியும் 10?) கம்ப்யூட்டர் வைரஸ் தாக்கும் என்ற புரளி வேறு! இது புரளி என்பதை இப்போதே நீங்கள் பரிசோதிக்கலாம். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று மட்டுமே. உங்கள் கம்ப்யூட்டரில் தேதியை அக்டோபர் 10, 2010 அன்று காலை 10:10 மணிக்கு மாற்றி பாருங்கள். என்ன நடந்தது - 10:10க்கு பிறகு 10:11 வந்தது தவிர?
இந்த எண் ஒற்றுமை சமீபத்தில் செப்டம்பர் 9, 1999 (9-9-99) அன்று வந்தது. அதன் பிறகு ஜனவரி 1, 2001 (1-1-1) அன்று வந்தது. அவ்வாண்டிலிருந்து இந்த எண் ஒற்றுமை ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது. அதாவது 2-2-2, 3-3-3, 4-4-4, 5-5-5, 6-6-6, 7-7-7, 8-8-8 மற்றும் 9-9-9 என்று. இன்னும் இரு ஆண்டுகளுக்கு இது தொடரும் (11-11-11, 12-12-12).
அதன் பிறகு என்ன? இருக்கவே இருக்கு 2012 டிசம்பர் 21 அன்று உலகம் அழியும் என்ற மற்றொரு புரளி! அதாவது 12-12-12 முடிந்து 9 நாளில்!!
ஒவ்வொரு நாளும் சுமார் 60,000 ஆபத்து விளைவிக்க கூடிய மென்பொருட்கள் (MALICIOUS SOFTWARES) கண்டுபிடிக்கப்படுகின்றன. இது இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட தேதியில் வைரஸ் தாக்கும் என்று நம்புவது ஆபத்தான போக்கு என கம்ப்யூட்டர் வைரசுக்கு எதிராக பாதுகாப்பு தரும் சோஃபேஸ் நிறுவன நிபுணர் கூறியுள்ளார். எல்லா நேரமும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறித்தியுள்ளார். இது போன்ற புரளி மார்ச் 3, 2003 (3-3-3) குறித்தும் பரப்பபட்டதாக அவர் நியாபகப்படுத்துகிறார்.
1980, 1990களில் வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி (FRIDAY THE 13TH) வைரஸ் பிரபலம். இதற்கு ஜெருசலம் வைரஸ் (JERUSALEM VIRUS) என்று வேறு பெயர். இதிலிருந்து தப்பிக்க பலர் கம்ப்யூட்டரில் தேதியை ஒரு நாள் கூட்டினர். வந்தது மற்றொரு வைரஸ் சனிக்கிழமை 14ஆம் (SATURDAY THE 14TH) தேதிக்காக - டர்பன் வைரஸ் (DURBAN VIRUS) என்ற பெயரில்!
|