காயல்பட்டினம் கடற்கரையை, நகரில் தொன்றுதொட்டு பேணப்பட்டு வரும் கலாச்சாரப் பாதுகாப்பு, சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் பராமரிப்பதற்கென அண்மையில் துவக்கப்பட்டு அரசுப் பதிவும் செய்யப்பட்டுள்ளது காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம்.
உள்ளூர் மட்டுமின்றி, சுற்றுவட்டாரங்களைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் இக்கடற்கரையின் சீரமைப்புப் பணிகளை காயல்பட்டினம் நகர்மன்ற நிர்வாகத்தின் துணையுடனும், பாதுகாப்புப் பணிகளை ஆறுமுகநேரி காவல்துறை துணையுடனும் செயல்படுத்திட இவ்வமைப்பு தீர்மானித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நிர்வாக அதிகாரி கணேசனை, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க தலைவர் ஓ.ஏ.நஸீர் அஹ்மத், துணைத்தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், செயலாளர் எல்.எம்.இ.கைலானீ, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஜரூக் ஆகியோரடங்கிய குழு நேற்று மாலை 05.00 மணிக்கு, நகர்மன்ற அலுவலகத்தில் சந்தித்து, ஒத்துழைப்பு கோரும் கடிதத்தை அளித்தனர்.
நகர்நலனைக் கருத்தில்கொண்டு, தேவைப்படும் அனைத்து ஒத்துழைப்புகளையும் செய்வதாக நிர்வாக அதிகாரி கணேசன் அப்போது தெரிவித்தார். நகர்மன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து அனைத்து ஒத்துழைப்புகளையும் தர ஆயத்தமாக உள்ளதாக, இச்சந்திப்பின்போது உடனிருந்த நகர்மன்ற உறுப்பினர் எம்.என்.சொளுக்கு தெரிவித்தார்.
பின்னர் அக்குழுவினர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், நகர்மன்ற துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் ஆகியோரை நகர்மன்றத் தலைவர் இல்லத்தில் சந்தித்து ஒத்துழைப்பு கோரும் கடிதத்தை அளித்தனர். அவர்களும் அனைத்து நகர்நலனுக்காக தேவைப்படும் ஒத்துழைப்புகளையும் தருவதாக அப்போது தெரிவித்தனர்.
|